கபாலத்தில் வேரோடும் நிலவு

வெட்டியானும் சுடுகாட்டுச் சித்தனுமான சிவன் ஏன் பித்தனானான்? *மரணத்துக்கஞ்சாக் கல் நெஞ்சன் வாழ்வின் அதிர்ச்சியில் பேதலித்துவிட்டானா? கஞ்சாக் கொத்தடிமையவன் சங்கிலிப் புகைப்பில் பிறழ்ந்தானா? அல்லது சதை கருகும் சிதைப் புகையை போதை கொண்டு மனச் சிதைவுற்றானா? ஆபரணமாயணிந்த நாகத்தை நாவில் தீண்ட வைத்து விஷ லஹரியில் திளைத்ததாலா? விரைப்படங்கா லிங்கத்தின் சிற்றின்ப மூர்க்கமோ? கொதிப்படங்கா யோனியின் பேரின்பக் கிறக்கமோ? அல்லது குண்டலினி மண்டைக்கேறி அடித்துவிட்டதா?* இல்லை, சிகை சூடிய அரும்பு நிலா தலைக்குள் வேர்பிடித்துவிட்டது கபாலத்தில் வேரோடும் நிலவின் வேர்க்கனிகள் விஷ முறிவு மூலிகையான சிறியாநங்கையை விடவும் அண்டக் கசப்பானவை அதன் பட்சிணிகள் யார் எவையாயினும் சித்தம் பேதலித்தல் சிவனுக்கும் விதி நிலவின் ஆணிவேர் உன்மத்த விஷமானது துளைத்திறங்கும் கபாலத்தை பாளம் பாளமாகப் பிளந்துவிடவும் கூடும் சிறுமூளை பிறழ்விக்கும் சல்லி வேர்களில் வேர்க்கனிகள் பழுத்ததும் சித்தம் கிளை விரிக்கும் ஆனால் சிவனே, ஆனால் சிவனே, உன் விஷ கண்டத்தில் அணிந்த நாகனையும் கொன்று தின்கிற பிணந்தின்னிக் கழுகுகள் மட்டுமே அதில் கூடு கட்டும்