ஹைட்ரோஃபோபியா

பிச்சைக் கபாலம் ஏந்திப் பெற்ற பித்தம் உன் காதல் என் அகச் சிவப்பை ஆழ் நீலமாக்கி, அகாலங்களை அமரத்துவமாக்கிய அந்த அமுத விஷம் புளித்துத் திரிந்த நாளில் நைந்த மூளையுடன் நாய்க் கலயத்தில் கொட்டினேன் நக்கித் தின்ற அதற்கு மசை பிடித்து என்னையே கடித்தது மண்டை பிளந்து மசை மூளை தெறிக்க உலக்கையால் ஒரே அடியில் அடித்துக் கொன்று ஊரெல்லைக்கப்பால் எறிந்தேன் பெருங்குடல் புரட்டி வாந்தியோடு வந்துவிடுமளவு அழுகிப் புழுத்து வெகு தூரம் நாறிக்கொண்டிருக்கும் அதன் சடலத்தைக் கொத்திப் பறந்த காக்கைகள் ஆகாசத்திலிருந்து மல்லாந்து வீழ்ந்தன மஞ்சள் பூவெடுத்த வேர்க்கடலைக் காடுகளெங்கும் தண்ணீரைக் கண்டு பேரச்சம் கொண்டு நாலு காலில் நடக்கும் நானின்று சலைவாய் நாவுடன் சங்கிலி விரைக்கத் திமிறி தொண்டை வெடிக்கக் குரைத்துக்கொண்டிருக்கிறேன் என் காதலை மசை நாயின் மண்டையோட்டைக் கடித்துக் குதறி ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது நிலவு