காதலோடு என்னைக் கொல்

தலையின் சுமை தலையேயாகத் திரிகிறேன் தாங்க மாட்டாமல் எனக்கு உதவி செய், தயவு செய்து காதலோடு என்னைக் கொல் தாட்சண்யமற்று ஒரே வீச்சில் கண்டத்தைத் துண்டமாக்கு பீறிடும் குருதித் தாரைகளை சப்புக்கொட்டியபடி பருகு ஒரு சொட்டேனும் பூமியில் சிந்திவிடாமல் பாரம் இறங்கி சவாசனத்தில்1 ஷாந்த்தியுற்றிருக்கும் முண்டத்தை நிலாக்காலங்களில் குதூகல ஊளையிடும் கரும்புத் தோட்டத்து நரிக் கூட்டத்திற்கு விருந்தாக்கு எனது ருத்ரக்ரந்த2த் தலையை மரண சாசனமாக வாரணாசி அகோரிகளுக்கு எழுதி வைக்கிறேன் மண்டையோட்டுக்கு பாதகம் வராமல் சிதைத் தீயில் தலைக் கறியைச் சுட்டுத் தின்னும் தந்த்ரம் அவர்களுக்குத் தெரியும் சிவன் மாமிசமென மஹா ப்ரசாதமாக அதை அவர்கள் உண்பார்கள் மனித உடலிலேயே மிக ம்ருதுவானதும் சமைக்காமலேயே சாப்பிடத் தக்கதுமான உதிரி பாகம் மூளைதான் (என் மூளைதின்னி நிலவான சந்த்ரிகாவுக்கு இது நன்கு தெரியும்) எனினும் சிவனுடையதைக் காட்டிலும் கலங்கிக் கூழாகிவிட்ட என் மூளையை அகோரிகள் விரும்புவார்களா என்பது தெரியவில்லை விரும்பாத பட்சத்தில் எரியும் ஏதோவொரு அனாதைப் பிணத்தின் சிதை நெருப்புக்கு அதை ஆகுதியாக்கலாம் என் பித்தக் கபாலம் பின்பு அகோரியின் பிச்சைப் பாத்திரமாக ஆகும் கங்கை நீர், மட்ட ரக ப்ராந்தி, பலி மிருக ரத்தம் அனைத்தும் அதில் பருகப்படும் தாவர, மாமிச பட்சணங்கள் யாவும் அதில் உண்ணப்படும் முன்னம் அது உயிருள்ளதாக இருந்தபோதைப் போலவே இச் சுவைப்புகளில் அது திளைக்கவும் கூடும் தானே அவற்றைப் பருகியதையும் உண்டதையும் போல மேலும் அது அப்போதும் பித்தத்தோடேயே இருக்கும் அப்போதும் கனவு காணும்; அப்போதும் த்யானிக்கும் ஆனால் நிரந்தரமான ஆழ் நீல சமாதியில் அப்போதும் அது SPD3யாகவே இருக்கும் எப்போதும் அகவுலகிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அது அவ்வப்போது புறவுலக வாழ்வுற்குள்ளும் வந்து தன் பாத்திரத்தை நடித்துச் செல்லும் ஆனால் எப்போதும் எப்போதும் தன்னையோ உலகையோ எண்ணி இளித்துக்கொண்டேயிருக்கும் அசல் பித்தனாக *** **அடிக் குறிப்புகள்:** 1. **சவாசனம்** அல்லது **ஷாந்த்தியாசனம்**: யோகா பயிற்சிகளில் இறுதியாக செய்யப்படுவது. உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்கும்படியாக தரையில் தளர்வாக மல்லாந்து படுத்துக்கொள்வது. 2. **ருத்ரக்ரந்தி**: தண்டுவடத்தில் கீழிருந்து மேலாக அமைந்த குண்டலினி சக்கரங்களில் 1.மூலாதார் (தண்டுவட அடிப் பாகம்), 2. ஸ்வாதிஸ்தான் (பிறப்புறுப்பு) ஆகிய இரண்டும் ப்ரம்மக்ரந்தி; 3. மணிப்பூரகம் (தொப்புள்), 4. அனாஹதம் (இருதயம்) ஆகிய இரண்டும் விஷ்ணுக்ரந்தி; 5. விஷுத்தம் (கழுத்து), ஆக்ஞா (புருவ மத்தி) ஆகிய இரண்டும் ருத்ரக்ரந்தி. அதாவது, சிவனுக்கானது. குண்டலினி யோகத்தின் படிநிலைகளில் இதுவே உச்சம். யோகத்தின் கடவுளாக சிவன் ஆவதும் இவ்விதமே. 3. **SPD - Schizoid Personality Disorder**: புற உலகிலிருந்து விலகி அக உலகிலேயே அதிகமும் வாழ்ந்துகொண்டிருக்கும் இயல்புடையவர்கள் ஸ்கிஸாய்ட் எனப்படும் மனப்பிளவினராக உளவியலில் வகைமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகையோருக்கு ஏற்படும் மனச் சிதைவே ஸ்கிஸாய்ட் பர்ஸனாலிட்டி டிஸ்ஸார்டர். தீவிர படைப்பாளிகள் பலரும் இந்த வகைமையினர். Schizoid மனநிலை Schizophrenia என்னும் அகத் தோற்ற வாழ்வியல்புடன் நெருங்கிய தொடர்புடையது எனினும் இரண்டும் ஒன்றல்ல. ஆனால், ஒருவர் இந்த இரு வகை இயல்பையும் ஒருங்கே கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.