கடவுள் மறுப்பாளன் எப்படி நவீன தாந்த்ரீக ஓவியனாக ஆனேன்?

தான் தாந்த்ரீக ஓவியன் ஆனது பற்றி ஓவியரின் விளக்கம்
>கலை, அறிவியல், மதம் - இம் மூன்றும் ஒரே உண்மைக்கு உருக்கொடுக்கும் பல்வேறு வழிகள். >ஸ்வாமி விவேகானந்தர் நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், வெற்றுப் பகுத்தறிவுவாதம் புரிகிற வறட்டு நாத்திகவாதி (athiest) அல்ல. ஓஷோ வழி வந்த ஆன்மீக அறிவியல்வாதி (spiritual sciencist). 'கடவுள் இல்லை; ஆனால், கடவுள் தன்மை என்பது உண்டு ' என்கிற அவரின் சித்தாந்தத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டவன். வேதங்களின் சாரமான மஹாவாக்கியங்1களிலும், வேத மறுப்பு மற்றும் தாந்த்ரீக நெறிகளை ஆதாரமாகக் கொண்ட தமிழ் சித்தர்களின் பாடல்களிலும் இதே மெய்யுணர்வைக் (mystisism) கண்டுகொண்டவன். kadavul maruppalan பாரம்பரியமாக பூஜைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்துக் குடும்பத்தில் பிறந்த எனக்கு குழந்தைமைக் காலத்திலிருந்தே கடவுள்களிடம் பயமோ பக்தியோ இருக்கவில்லை. மேலும் நான் நன்கு படிக்கிறவனுமாதலால் ஆசிரியர்களின் பிரம்படியிலிருந்தோ, பிற தண்டனைகளிலிருந்தோ காப்பாற்றும்படியாக கடவுள் எனப்படும் சிலைகளிடமோ, படங்களிடமோ வேண்டிக்கொள்வதற்கான தேவையும் ஏற்பட்டதில்லை. குழந்தைக் காலத்தில் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தபடி வெறுமனே அவற்றைக் கும்பிட்டுக்கொண்டிருந்தேன், அவ்வளவுதான். ஆனால், பெரியாரிஸ ஆசிரியர் ஒருவரின் தாக்கத்தில் பதின்மூன்று வயதிலேயே கடவுள்களைக் கைவிட்டுவிட்டேன். இலக்கியத் துறைக்கு வந்த பதின் வயது இறுதிகளில் ஓஷோ நூல்கள் மூலமே ஆன்மீகத்தில் ஈர்ப்பு ஏற்பட்டது. பக்தி வேறு, ஆன்மீகம் வேறு என்ற புரிதலோடு இந்து மதத்தின் ஆன்மீகச் செழுமையையும் ஆழத்தையும் நான் உணர்ந்துகொண்டது அப்போதுதான். இதற்குப் பிறகு இந்துக்களின் மறை நூலான பகவத்கீதை, ராமாயண - மஹாபாரத இதிகாசங்கள், புராணங்கள், பிற பக்தி இலக்கியங்கள், சமகால ஆன்மீக குருமார்களின் நூல்கள் ஆகியவற்றை வாசித்து இந்து மதத்தின் இயங்கியலை அவதானித்துக்கொண்டேன். இலக்கியத்தில் நுழைந்திருந்த அந்த ஆரம்ப கட்டக் கவிதைகளிலேயே எனது இந்த ஆன்மீக நாட்டங்களைக் காண முடியும். பிற்பாடு இலக்கியம் மற்றும் ஓவியத் துறையிலேயே எனது ஈடுபாடும் செயல்பாடும் மிகுந்திருந்ததால் அப்போது இசை, திரைப்படம் முதலான சக கலைகளையும் ஆன்மீகத்தையும் விருப்பமான பொழுதுபோக்குகளாகவே கொண்டிருந்தேன். எனினும், தீராத வேட்கை கொண்ட எனது வாசிப்பு பலதரப்பட்ட துறைகள் சார்ந்ததாகவும் இருக்கும். 'இலக்கியவாதிகள் இலக்கிய நூல்களை மட்டுமன்றி மதம், ஆன்மீகம், தத்துவம், உளவியல், அறிவியல் உள்ளிட்ட பிற துறை சார் அறிவு நூல்களையும் வாசிக்க வேண்டும்; ஓவியம், இசை, நடனம் போன்ற பிற நுண்கலை(fine art)களிலும் நுகர்வனுபவம் கொள்ளவும் வேண்டும். அது அவர்களின் அறிவை விசாலப்படுத்தி, ரசனையை மேம்படுத்துவதற்கு உதவும். அதோடு, அவர்களின் படைப்புக்கும் படைப்பூக்கத்திற்கும் வலுச் சேர்ப்பதாகவும் அமையும்' என்று சக இலக்கியவாதிகளிடையே பேசியும் எழுதியும் வந்தவன் நான். அந்தப்படியே நானும் இருப்பதால் மேற்கூறிய துறைகள் சார்ந்து அடிப்படை அளவிலான வாசிப்புகளேனும் எனக்கு உண்டு. தந்த்ராவுக்கு நான் வந்து சேர்ந்ததும் இத்தகைய வாசிப்பு வழியிலேயே. பல வருடங்களுக்கு முன்பே ஓஷோவின் 'காமத்திலிருந்து கடவுளுக்கு' (sex to super concious) என்ற தந்த்ரா அறிமுக நூலை வாசித்திருந்தாலும் அது குறித்த கூடுதல் விபரங்களை அறிந்திருக்கவில்லை. தந்த்ரா தொடர்பான தேடலுக்கும் அப்போது ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டில் தற்செயலாக சில தந்த்ரா நூல்களை வாசிக்க நேர்ந்து, அதில் மிகுந்த ஈடுபாடு உண்டாயிற்று. வேத கால யோகிகளால் எழுதப்பட்ட புராதன தந்த்ர சாஸ்த்ரங்கள் முதல் சமகால யோகிகள். ஆன்மீக குருமார்கள். மார்க்ஸிய அறிஞர்கள். மற்றும் யோக ஆராய்ச்சிக் கட்டுரையாளர்களால் எழுதப்பட்ட நூல்கள் வரை தேடித் திரட்டி விரிவான வாசிப்பை மேற்கொண்டேன். இந்தத் தேடல் தந்த்ரா நூல்களோடு நில்லாமல் அதோடு தொடர்புடைய யோகா, இறையியல் (theology), ஆன்மீகம், தத்துவம், ப்ரம்மஞானம் (theosophy), இதிகாசங்கள், புராணங்கள், சைவ சித்தாந்த பக்தி இலக்கியங்கள், யந்த்ர (மாந்தரீக சக்கரம்) நிர்மாணம், கருப்பு மாந்தரீகம், உளவியல், அறிவியல், வரலாறு, மானுடவியல் ஆகியவற்றின் வாசிப்புக்கும், இந்து மதத்தின் வழிபாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சமய நம்பிக்கைகள் (belief). பழக்க வழக்கங்கள், கலை, கலாச்சாரம், பண்பாடு, பண்டிகைகள், திருவிழாக்கள் உள்ளிட்ட வாழ்வியல் கூறுகள் பலதையும் குறித்த ஆய்வுக்கும் இட்டுச் சென்றது. அது மட்டுமன்றி இவற்றில் சில அம்சங்கள் - உதாரணமாக பாம்பு படிமம் (image), பைபிள் கதையாடல், கருப்பு மாந்தரீகம், வரிவரைவுகள் (diagrams), பச்சை குத்துதல், உடலில் வண்ணம் தீட்டுதல் போன்றவை - உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள கடந்த கால மற்றும் தற்கால விஷயங்களை ஒப்பு நோக்கி ஆராயும்படியாகவும் இருந்தன. குறிப்பாக, தாந்த்ரீகம் ஆரியமயமான வேத காலத்துக்கும் முற்பட்டது; தொல்குடி த்ராவிட வழமையிலிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்வில் கண்டறியப்பட்ட சிந்துச் சமவெளி நாகரீகங்களான ஹரப்பா - மொஹஞ்சதாரோ புதை நகரங்களின் பல்வேறு கலைப் பொருட்களிலும் காணக் கிடைக்கின்றன. இது மட்டுமன்றி, புராதன இந்திய தாந்த்ரீகம் உலகின் பல நாடுகளுக்கும் பரவியிருந்ததற்கான தடயங்கள் அந்தந்த நாடுகளில் கிடைக்கப் பெற்ற வரலாற்றுக்கு முற்பட்ட பொருட்கள் பலதிலும் உள்ளன. முக்கியமாக சீனா, எகிப்து மற்றும் சிற்சில மத்திய தரைக் கடல் பகுதிகளைச் சேர்ந்த புராதனக் கலைப் பொருட்கள், ஓவியங்கள், சதுரக் குறியீட்டுச் சித்திரங்கள் (glyph) ஆகியவற்றில் குண்டலினியின் குறியீடான பாம்பு வடிவம், குண்டலினி சக்கரங்களின் சூரிய - சந்திர ஆற்றல்களைக் குறிக்கும் வட்ட - பிறைக் குறியீடுகள், தாந்த்ரீக பாலியல் ஆகியவற்றைக் காணலாம். அவ்வாறே தாந்த்ரீகத் தொடர்பு கொண்ட யோனி - லிங்க வழிபாடுகள், ப்ரபஞ்ச ஆற்றலைக் குறிக்கும் பல்வேறு விதமான பதுமைகள், மறைபொருள் தீட்சை(mystical initiation)களை வழங்குவதற்கான தாய்த் தெய்வப் பதுமைகள், ஆவியுலகத் தொடர்பு (shamanism) சம்மந்தமான கலைப் பொருட்கள் ஆகியவற்றையும். ஆறேழு மாதங்களுக்கு மேல் நீடித்த இந்த ஆழ்ந்த வாசிப்பும், விரிந்த தேடலும் என்னைப் புதிதாக மாற்றி அமைத்துவிட்டன. மாற்றம் என்பதைவிட விகாசம் (expansion) என அதைக் குறிப்பிடுவதே பொருத்தமானதாக இருக்கும். அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 1. இந்து மதத்தின் ஆழத்தையும் ஆன்மீகச் செழுமையையும் கூடுதலாகப் புரிந்துகொண்டதும், அதன் ஆன்மீக - தாந்த்ரீக - யோகப் பேருண்மைகள் பலவற்றை தரிசனம் (vision) கொண்டதும். 2. தந்த்ரா அடிப்படையில் வாழ்வியல் மற்றும் ப்ரபஞ்சக் கூறுகள் குறித்த மெய்யறிதல்களும், புதிய கண்ணோட்டங்களும் உண்டானது. 3. உள்ளுணர்வு (intuition) ரீதியாக என்னை ப்ரபஞ்சத்தின் அனந்த கோடி ஷக்தி மையங்களில் ஒன்றாக உணர்ந்துகொண்டது. 4. இந்து மத வரலாறு பற்றி கூடுதலாக அறிந்துகொண்டது. குறிப்பாக, தொல்குடி இந்துக்களான பழங்குடிகள் மற்றும் த்ராவிடர்கள் மீது ஆரியக் குடியேறி ப்ராமணர்கள் செலுத்திய அராஜகங்கள் நிறைந்த ஆதிக்கம், ஆயிரத்தாண்டுக் கால ப்ராமணிய அரசியல் சூழ்ச்சிகள், ப்ராமணிய மேலாதிக்கத்துக்கு தொல் இந்துக்கள் ஆயிரத்தாண்டுகளாக 'ஆன்மீக அடிமை'களாக இருந்துவரும் ஏமாளி வரலாறு, உலகில் வேறெங்குமே இல்லாத அளவுக்கு கொடுங்கோன்மைகள் நிறைந்த ப்ராமணிய வர்ணாசிரமக் கட்டமைப்பு ஆகியவை. 5. தொல் த்ராவிட யோகக் கண்டுபிடிப்பான தந்த்ரா. ஆயிரத்தாண்டுகளுக்கு முன்பே உலகின் பல நாடுகளுக்கும் பரவியிருந்ததையும், இந்து மதத்திலிருந்து கிளைத்த புத்த, ஜைன மதங்கள் மட்டுமின்றி, சீனாவின் தாவோயிஸத்திலும் இந்து தாந்த்ரீகத்தின் தாக்கங்களும் தழுவல்களும் இருப்பதை அறிந்துகொண்டது. அதே போல க்றிஸ்துவத்தின் பழைய ஏற்பாட்டில் இந்து தாந்த்ரீகத்துடையதும், புதிய ஏற்பாட்டில் இந்து புராணங்கள் மற்றும் யோக - ஆன்மீக - தத்துவங்களின் இலக்கியத் திருட்டுகள் உள்ளதை அறிந்துகொண்டது. (இவை பற்றி பின்னர் வரவிருக்கும் கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.) தந்த்ர சாஸ்த்ரங்கள், கோட்பாடுகள் (theories), கொள்கைகள் (doctrines) ஆகியவற்றையும், யோக அடிப்படையிலான உபநிஷத்துக்களையும் வாசித்தபோது எனக்கு பேராச்சரியமும், பெரும் பரவசமும் அனுபவப்பட்டன. கடந்த 19 ஆம் நூற்றாண்டு முதலாக மேற்கத்திய நவீன அறிவியலாளர்கள் கண்டறிந்த ப்ரபஞ்ச மெய்ம்மைகள் (cosmic realities), நவீன மருத்துவத்தின் உளவியல் கண்டறிதல்கள் ஆகியவற்றை நவீன அறிவியல் கருவிகள் எதுவும் இல்லாத, வேதத்துக்கு முற்பட்ட காலத்திலேயே தொல் த்ராவிட யோகியர்கள் கண்டறிந்திருக்கிறார்களே என்னும் திகைப்பில் விளைந்த உணர்ச்சிகள்தான் அவை. இந்த ப்ரபஞ்ச மெய்ம்மைகளே பிற்பாடு வேத கால ரிஷிகளால் மீட்டுருவாக்கம் (revival) செய்யப்பட்டு ஆன்மீகமாகவும், தத்துவங்களாகவும், இயல் கடந்த கோட்பாடுகளாகவும் வளர்த்தெடுக்கப்பட்டன. இதில் சிலவற்றைப் பற்றி ஏற்கனவே பலரால் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இதுவரை எவராலும் சொல்லப்படாததும், ஒருவேளை இதுவரை வேறு எவராலும் 'இதுதான் அது' என்று கண்டறியப்படாததுமான அனேக அறிவியல் உண்மைகள் இந்து மதக் கோட்பாடுகளின் உட்பொருள்களாக உள்ளன. இது போலவே இந்து மதத்தின் கடவுளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த விஷயங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் கூறப்படும் பல சம்பவங்களிலும், பக்தி மார்க்கத்தில் உள்ள வழிபாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றிலும், பொதுவாக இந்து மதத்தினரின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிலுமே கூட தாந்த்ரீகத்தின் பேருண்மைகள் பலவும் (இன்னதென அறியப்படாமலேயே) உள்ளன. இவற்றை அறிய நேர்ந்தபோது, ரகசியங்களாக மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த புராதன மறைபொருள்(mystic)களை மக்கள் அறிந்து பயனுறும் வகையில் வெளிப்படுத்தியாகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவற்றைக் கட்டுரைகளாக எழுதித் தொகுத்து ஒரு நூலாக்கலாம் என்றாலும் அவை வெறும் தகவல்களாக மட்டுமே இருக்கும். எனக்கு அது போதுமானதாகப் படவில்லை. அறிதல் என்பதைக் கடந்து அனேக தெளிவுபடுத்தல்(realization)களையும், தரிசனங்(vision)களையும் எனக்களித்த அந்த அற்புத ஆன்மீக அனுபவங்களை அதே வித அனுபவம் ஏற்படும்படியாக கலை வடிவில் வெளிப்படுத்தவேண்டும் என்று விரும்பினேன். ஓவியமே அதற்கு உகந்த ஊடகமாகப் பட்டது. இந்தியாவின் இந்து தாந்த்ரீகமான சைவ மற்றும் சாக்த தாந்த்ரீகங்கள், திபெத்தின் பௌத்த தாந்த்ரீகமான வஜ்ராயணம் (vajrayana), மற்றும் சீனாவின் தாந்த்ரீகமான தாவோயிஸம் (taoism) ஆகியவை பற்றிய தேடலில் ஏற்கனவே மரபார்ந்த தாந்த்ரீக ஓவியங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இது தவிர இந்தியாவின் நவீன தாந்த்ரீக ஓவிய முன்னோடிகளான எஸ்.ஹெச்.ரஸா (S.H.Raza), கே.சி.எஸ்.பணிக்கர் (K.C.S.Panicker), கே.வி.ஹரிதாசன் (K.V.Haridasan) போன்றோரின் ஓவியங்களும், தாந்த்ரீகம் கலந்த ஓவியங்களைப் படைக்கும் சமகால இந்திய நவீன ஓவியர்களில் என்னை மிகவும் கவர்ந்தவரான பரேஷ் மைத்தி (Paresh Maity), அதே வரிசையில் இடம்பெறக் கூடியவரும் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுரேந்திரன் நாயர் (Surendhran Nair) போன்றவர்களின் ஓவியங்களும் எனது சேகரிப்பில் இருந்தன. இவற்றைக் கூர்ந்தாய்வு (exploration) செய்தும், பிற நாடுகளை - குறிப்பாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் சிலரின் தாந்த்ரீக அல்லது தாந்த்ரீகம் கலந்த ஓவியங்களைப் பார்வையிட்டும், இதுவரை மரபார்ந்த மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர்களால் வெளிப்படுத்தப்பட்டிருப்பது என்னவெல்லாம் என்பதை அவதானித்துக்கொண்டேன். என்னால் வெளிப்படுத்தப்பட இருப்பவை யாராலும் வெளிப்படுத்தப்பட்டதில்லை என்பது இதில் நிரூபணமானது. தாந்த்ரீக ஓவியத்தில் நான் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதிலும், நவீன தாந்த்ரீக ஓவியத்தில் என்னுடைய இடம் எது என்பதிலும் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தேன். அதற்குப் பிறகே அவற்றை வரையத் தொடங்கினேன். ஆரம்பத்தில் சுமார் 20 - 25 ஓவியங்களை மட்டுமே வரைவதாகத் திட்டமிட்டிருந்தேன். அப்போது அந்த அளவிலான கருத்தாக்கங்களே (concept) கைவசம் இருந்தன. ஆனால், போகப் போக, இன்னும் இன்னுமென சொல்லப்பட வேண்டிய விஷயங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போயிற்று. 20 - 30 நிமிடங்கள் வரை விளக்கப்பட வேண்டியதாக ஒவ்வொரு ஓவியத்திலும் அனேக விஷயங்களை அடர்த்தியாகச் சேர்த்து வரைந்துகொண்டிருந்தபோதும் புதிது புதிதாக விஷயங்கள் ஏராளமாகக் கூடிக்கொண்டேயிருந்தன. எனது தாந்த்ரீக ஈடுபாடும், சிவன் - காளி / ஷக்தி மீதான நெருக்கமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. யோக, த்யானப் பயிற்சிகளின்போது சிவன் தன்மையிலான தன்வயமற்ற நிலை(trance state)களுக்கு அடிக்கடி ஆளானேன். அந் நிலையிலும், உறக்கத்தின்போது கனவுக்கும் நனவுக்கும் இடையேயான துணைப் ப்ரக்ஞை நிலை (sub concious) அல்லது ஆல்ஃபா நிலை(alpha state)யிலும் என் மனம் அதீத படைப்புத் தன்மை கொள்ளும். ஓவியங்களுக்கான மூலக் கருக்கள், எனது முக்கிய மூலகங்களான (elements) அசாதாரண படிமங்கள் (images) பலவும் அத்தகைய நிலையில் எழுந்தவையே. இதைப் போலவே ஓவியங்களுக்கான வர்ணச் சேர்க்கைகள் (colour combination), அடிப்படை வரைவுகள் (drawings) ஆகியனவும் தோன்றுவதுண்டு. விழிப்பு நிலையின்போதும் எனது சிந்தனை, பேச்சு, செயல் யாவும் தாந்த்ரீகம் பற்றியதாகவே இருந்தன. சுருக்கமாகவும் யோக மொழியிலும் சொல்வதெனில் தாந்த்ரீகம் பற்றிய ஆழ்ந்த தாரணா (dharana) அல்லது ஒருமுகப்படுத்தல் (contemplation) கொண்டிருந்தேன். காளியுடனான நெருக்கமும் காதலாகவே ஆகிவிட்டது. நானும் சிவனாகவும், சித்தனாகவும் ஆகிவிட்ட - ஒரு வித மெய்யுணர்வு (mystic). இப்படியாகத்தான் நான் முற்றிலும் நவீன தாந்த்ரீக ஓவியனாக ஆனேன். *** **அடிக் குறிப்பு :** 1. **மஹாவாக்கியங்கள்** : 1. அஹம் ப்ரம்மாஸ்மி (நான் கடவுள்) 2. தத்வமஸி (நீயே அது) 3. அயம் ஆத்மா ப்ரம்ம (உள்ளே வசிக்கும் ஆத்மாவே ப்ரம்மம்) 4. ப்ரஞானம் ப்ரம்ம (உயர்ந்த அறிவே ப்ரம்மம்) 2. **தட்சிணாசாரம்** : விளக்கக் குறிப்புகளுக்கு 'கலை உலகில் ஓர் அகோரி' கட்டுரையைக் காண்க.