காஸ்மிக் உட்டோபியா - என் கனவு!

நான்காம் கோணம் இதழில் வெளியான ஓவியரின் நேர்காணல்
(எம்.எஸ், ராஜகோபால் அவர்களை ஆசிரியராகவும், கவிஞர் கரிகாலனை பொறுப்பாசிரியராகவும் கொண்டு வெளிவரும் 'நான்காம் கோணம்' முதல் இதழில் - ஜனவரி 2017 - வெளியான நேர்காணல்). *** ###### 1. இலக்கியத்திலிருந்து ஓவியத் துறைக்கு வந்தவர் நீங்கள். இவ்விரு துறைகளுக்குமான ஒற்றுமை - வேற்றுமைகள் பற்றி கூறுங்கள். கலை - இலக்கியங்கள் அடிப்படையில் ஒருமித்த பண்புகளைக் கொண்டவை என்பது பொதுவாகவே அறியப்படுவது. அவற்றின் கலைக்கூறுகள், இலக்கணங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் ஒத்த தன்மைகளைக் காண முடியும். இவ்வாறே இலக்கியவாதிகள் மற்றும் கலைஞர்களின் குணாதிசயங்கள், சிந்தனை, வாழ்வியல் உள்ளிட்டவையும் ஒரே மாதிரியாக இருக்கக் காணலாம். இவ்விரு துறைகளுக்கான வேறுபாடுகளில் முக்கியமானது, இலக்கியத்துக்கு மொழி எல்லைகள் உண்டு; கலைக்கு அது இல்லை என்பது. இலக்கியம் மொழி எல்லையைக் கடந்து செல்ல மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகின்றன. கலை, உலகப் பொது மொழி என்பதால் அது பிரதேசம், மாநிலம், தேசம் முதலான எல்லைகலைக் கடந்து நேரடியாக உலக அரங்கின் நுகர்வுக்குச் செல்ல முடிகிறது. ஓவியத் துறையை நான் தேர்ந்தெடுப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ###### 2. நவீன ஓவியத்தில் தாந்த்ரீகம் என்ற சிறப்புத் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம், அதன் தேவை மற்றும் பயன்கள் என்ன? கலை ரீதியான காரணங்களுக்காக அன்றி, மக்களுக்கான தேவை மற்றும் பயன்கள் கருதியே தாந்த்ரீகத்தைத் தேர்ந்தெடுத்தேன். அனைத்து மதங்களிலும் பெரும்பான்மையாக உள்ள பக்தி மார்க்கத்தில் பற்பல குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது மதவாதம். இது இரு வித தீமைகளைச் செய்கிறது. ஒன்று, அந்நிய மதங்கள் மீதான விரோதம். இன்னொன்று, தன் மதத்தவர்களுக்கே மெய்யான சமயப் பேருண்மைகளை வெளிப்படுத்தாமல் மூடி மறைத்து, அவர்களை ஆன்மீக அடிமைகளாக்கி அதில் லாபம் காண்பது. தாந்த்ரீகம் போன்ற மெய்ஞான மார்க்கம் மக்களின் ஆன்மீக விடுதலைக்கும், சமய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்கும். இதுவே தாந்த்ரீகம் மற்றும் அதற்கு இணையான தாவோ, கபாலிஸம், சூஃபிஸம், நோசிஸ், ஷாமெனிஸம் போன்ற பிற மெய்ஞான மார்க்கங்களின் தேவையும் பயனுமாகக் கருதுகிறேன். எனது ஓவியங்கள் இந்த நோக்கம் கொண்டவையே! ###### 3. உங்களது அலுவல் வலைத் தளத்தின் கொள்கை முழக்கமாக, 'வேதாந்தம் துறவிகளுக்கு; தந்த்ரா இல்லறத்தவர்களுக்கு!' என்ற வாசகம் உள்ளது. இது பற்றி சுருக்கமாக விளக்குங்கள். வேதாந்தம் பொதுவாக துறவிகளுக்கே அதிகமும் பொருத்தமானது. ஆனால், தாந்த்ரீகமோ இல்லறவாசிகள், துறவிகள் ஆகிய இரு தரப்புக்கும் பொருந்தக்கூடியது. துறவிகள் வலது மார்க்க தாந்த்ரீகமான தஷிணாசாரத்தைப் பின்பற்றியும், இல்லறவாசிகள் இடது மார்க்க தாந்த்ரீகமான வாமாச்சாரத்தைப் பின்பற்றியும் மெய்ஞானம் அடையலாம். தாந்த்ரீகம், ஆச்சார வேத மரபுக்கு எதிரானது என்பது மட்டுமன்றி, அதற்கு மிக முற்பட்ட புராதனத் தன்மையுடையதும் கூட என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இந்து மதத்தில் மட்டுமல்ல; உலக புராதன மதங்கள் அனைத்திலுமே அடிப்படையாக இருப்பதும், ஆதி முதலே இருந்து வருவதும் தாந்த்ரீக வழமைகள்தான் என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறேன். இதன் வேர்கள் பண்டைய காலத்தின் வேளாண் சமூக அமைப்பிலான தாய் மையச் சமூகம் வரை செல்லக் கூடியன. கிளை விரிப்புகள் இனி வரவிருக்கும் ஆயிரத்தாண்டுகளுக்கும் பரவும். ###### 4. மரபு ஓவியம், நவீன ஓவியம் ஆகிய இரண்டிலுமே ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் நீங்கள். இவ்விரு வகைமைகளும் உங்களது ஓவியங்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படுகின்றன?
வடிவம், வெளிப்பாடு ஆகியவற்றில் இவ்விரு வகைமைகளிலிருந்தும் மூலகங்களை எடுத்துக்கொண்டு அதைத் தன்வயப்படுத்திக்கொள்கிறேன். இந்திய ஓவிய மரபில் வேரூன்றி, ஐரோப்பிய நவீன ஓவியத்தில் கிளை விரிப்பது என்கிற முன்னோடிகளின் இயங்கியலைப் பின்பற்றுபவை எனது ஓவியங்கள். குறிப்பாக மரபு வகையில் கேரளத்தின் தாந்த்ரீகச் சடங்குகளான தெய்யம், களமெழுத்து ஆகியவற்றிலிருந்தும், தெய்யத்திலிருந்து கிளைத்த மோகினியாட்ட அலங்காரத்திலிருந்தும் கலைக் கூறுகளை எடுத்துக்கொள்கிறேன். இந்து மற்றும் பௌத்த தாந்த்ரீக மரபு ஓவியங்கள், சிற்பங்கள், மண்டலங்கள் ஆகியவற்றிலிருந்து சிற்சில அம்சங்களைக் கைக்கொள்வதும் உண்டு. தாந்த்ரீக மரபுக்கு அப்பால் உள்ள பொது ஓவிய மரபிலிருந்து இப்போதைக்கு எதுவும் எடுத்துக்கொள்வதில்லை. நவீனத்துவக் கோட்பாடுகளில் இன்றளவும் தனது செல்வாக்கை சமகால ஓவியர்களிலும் கொண்டுள்ள வெளிப்பாட்டுவாதத்தை நானும் கைக்கொள்கிறேன். ###### 5. படைப்பாளி என்ற நிலையில் இலக்கியம் படைப்பதற்கும், ஓவியம் படைப்பதற்குமான அனுபவங்களில் உள்ள ஒற்றுமை - வேற்றுமைகள்? இது பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதுமளவுக்கு அனுபவ ஒப்பீடுகள் உள்ளன. ஆனால், அவை எனது சொந்த அனுபவங்கள் என்பதால் மற்றவர்களுக்குப் பொருந்தாது. இதில் ஒற்றுமைகளைக் காட்டிலும் வேற்றுமைகளே அதிகம். அதில் மிக முக்கியமானது: இலக்கியம் எனக்கு மூளை வதை; ஓவியம் எனக்கு கொண்டாட்டம்! இன்னமும் ஒரு வாக்கியத்தைக் கூட அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத முடியாதவனும், ஒவ்வொரு சொற்களிலும் வாக்கிய அமைப்புகளிலும் கவனமெடுத்து மீண்டும் மீண்டும் திருத்திச் செப்பனிட்டுக்கொண்டே இருப்பவனுமான எனக்கு, படைப்பிலக்கியம் என்றும் நாஜி முகாம் மூளை வதையாகவே இருந்தது. ஆனால், ஓவியத்தில் தாந்த்ரீகத்தை சிறப்புத் துறையாக மேற்கொண்டிருப்பதால், இயல்பாகவே உள்ள ஆன்மீக ஈடுபாடு, யோகவியல் அனுபவங்கள் ஆகியவற்றோடு, தேடலில் அடைந்த புதிய பல கண்டறிதல்களையும் கண்டடைதல்களையும் வெளிப்படுத்தி நவீன தாந்த்ரீக ஓவியங்களைப் படைப்பது மகிழ்ச்சியூட்டுவதாகவும், ஆனந்தமயமானதாகவும் இருக்கிறது. ###### 6. ஓவியத்தை சுயமாகக் கற்றுக்கொண்ட நீங்கள், உங்களது மானசீக குருமார்கள் என பிக்காஸோ, ஹென்றி மத்தீஸ், எம்.எஃப்.ஹூஸேன் ஆகிய மூவரையும் குறிப்பிடுகிறீர்கள். ஆனால், அவர்களின் சாயல்கள் உங்களது ஓவியங்களில் காணப்படுவதில்லையே...!? குருமார்களிடமிருந்து உள்ளடக்கத்தையும், உயிராற்றலையும்தான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்; வடிவத்தை அல்ல. வடிவத்தைப் பின்பற்றியிருந்தால் நகலெடுப்பாக ஆகிவிடுவதற்கும், சாயலுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். உள்ளடக்கம் மற்றும் உயிராற்றலை எடுத்துக்கொண்டதால் அசலாகவும், தனித்தன்மை மற்றும் ஆளுமையோடும் இருக்க முடிகிறது. ###### 7. கடந்த ஆறு ஆண்டுகளாக நீங்கள் மேற்கொண்ட தாந்த்ரீக தேடலில் பெற்ற அனுபவங்கள் மற்றும் கண்டடைதலில் முக்கியமானவற்றை சுருக்கமாகப் பகிர்ந்துகொள்ள முடியுமா? தாந்த்ரீகத் தேடலிலும் எனது ஓவியங்கள் சார்ந்தும் எண்ணற்ற மெய்யியல் (mysticism) மற்றும் ஆன்மீக அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அவற்றைச் சுருக்கமாகச் சொன்னாலே பல பக்கங்களுக்கு நீளும். அனுபவக் கட்டுரைகளில் அவற்றை எழுதலாம். இதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டியது - தாந்த்ரீகத் தேடலே என்னை எனக்குக் கண்டடைய வைத்தது. நான் யார், எதற்காகப் பிறந்தேன், உலக சமுதாயத்தில் எனது பணி / கடமை என்ன என்கிற தெளிவுபடல்கள் தாந்த்ரீகம் வாயிலாகவே கிடைத்தன. அதற்கும் அப்பால் என்னை ப்ரபஞ்ச ஆற்றலின் ஒரு கூறாக உணர்ந்தறியும் மெய்யனுபவங்களும் வாய்க்கப் பெற்றன. தாந்த்ரீக ஓவியன் என்ற அடையாளம் வலுப்பட்டது இவற்றிலிருந்தே! யோக - த்யானப் பயிற்சிகளின்போதும், உறக்கத்தின்போதும், படைப்பாக்கங்களின்போதும் ஆல்ஃபா நிலை அகவிழிப்புக்கும், அபரிமிதமான படைப்புத்தன்மைக்கும் ஆட்பட்ட அனுபவங்கள் ஏராளம். ஆழ்நிலை த்யானத்தில், ட்ரான்ஸ் என்று சொல்லப்படுகிற நிலையில், மீயறிஇயற்பியல் (metaphysics) அனுபவங்களுக்கு ஆட்பட்டு, பல வித தரிசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து ஓவியங்களில் வெளிப்படுத்தியும் வருகிறேன். ஆய்வு மற்றும் தர்க்க தளத்தில், தாந்த்ரீகமே இந்து மதத்துக்கு ஆதாரம் என்பது எனது துவக்க கட்ட தேடலில் கண்டடைந்த தெளிவுபடல் ஆகும். எனது அலுவல் வலைத்தளத்தில் உள்ள, 'தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி' என்ற தலைப்பிலான மூன்று அத்தியாயக் கட்டுரையில் இது குறித்த விபரங்களைத் தெரிவித்துள்ளேன். மேலும் சில ஆண்டுகளாகத் தொடர்ந்த தேடல் மற்றும் ஆய்வின் வாயிலாக தாந்த்ரீகமே உலக மதங்கள் அனைத்துக்கும் அடிப்படை என்பது நிரூபணப்பட்டிருக்கிறது. எனது சமீப கால ஓவியங்கள் இந்தக் கண்டடைதல்களை உள்ளடக்கியவை. ###### 8. மெய்ஞானம் என்பது பற்றி அடிக்கடி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். ஞானிகளுக்கு அது பொருந்தும். சாமான்ய மக்களுக்கு - அதுவும் இன்றைய அதி நவீன காலகட்டத்தில் - அது சாத்தியமா? மேலும், அது எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? ஆத்மஞானம் (Enlightment, மெய்ஞானம் (Wisdom) ஆகிய இரண்டுக்குமான வேறுபாட்டை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பற்றற்ற துறவிகள் லோகாயத வாழ்வை விடுத்து, கடும் தவத்தின் மூலம் ஆன்மீக வாழ்வில் அடையும் விடுதலை (Liberation) / மோட்ச நிலையே ஆத்மஞானம் ஆகும். புத்தர், மகாவீரர், ரமணர் போன்றவர்கள் இவ் வகையிலானவர்கள். இல்லறம் மற்றும் லோகாயத வாழ்வில் ஈடுபட்டபடியே ஆன்மீக விடுதலையையும் அடைவதற்கு வழி வகுப்பதே மெய்ஞானம். முகம்மது நபி, யேசு க்றிஸ்து உட்பட இவ் வகையிலான மெய்ஞானிகள் அனைத்து மதங்களிலும் உள்ளனர். மேலும், முன்பே கூறியபடி மெய்ஞானமே அனைத்து மதங்களின் ஆதாரமாகவும் உள்ளது. சாமான்ய மனிதர்கள் முதல் ஞானிகள் வரையும், இல்லறவாசிகள் - துறவிகள் என இரு தரப்பினரும் பின்பற்றக்கூடிய எளிய யோக வழி அது. இந்த அதி நவீன காலத்தில் மட்டுமல்ல; இனி வரவிருக்கிற அதீத நவீன காலத்திலும் மெய்ஞானம் சாத்தியமே! சமீப பத்தாண்டுகளில் யோகம், த்யானம், தாந்த்ரீகம் ஆகியவை உலக அளவில் பல்கிப் பரவியுள்ளது பரவலாக அனைவரும் அறிந்தது. அவரவர் ஈடுபாட்டைப் பொறுத்த அளவுக்கு இது அவர்களுக்கான மெய்ஞானம், ஆன்மீக விடுதலை ஆகியவற்றை சாத்தியமாக்குகிறது. பகுத்தறிவும், அறிவியல்வாதமும், அறிவியல் முன்னேற்றங்களும் பெருகியுள்ள இந்த அதி நவீன காலகட்டத்திலும், மெத்தப் படித்தவர்களாலேயே மதவாதங்கள், மதக் கலவரங்கள், இன - ஜாதிக் கொடுங்கோன்மைகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம், துவக்கத்திலேயே சொன்னபடி, பக்தி மார்க்கத்தில் உள்ள குறைபாடுகள்தான். மெய்ஞான மார்க்கமே இந்தக் குறைபாடுகளை நீக்கி, ஆன்மீக விடுதலைக்கும், உலகளாவிய மத ஒருமைப்பாட்டுக்கும் வழி வகுக்கும். ###### 9. உங்களது இந்தக் கருத்தியல்படி தந்த்ராவை ஒரு இயக்கமாக முன்னெடுக்கும் திட்டம் உண்டா? எனது கருத்தியல்கள் நடைமுறைப்படவும், அதன் நோக்கங்கள் நிறைவேறவும் வேண்டுமெனில் தந்த்ராவை ஒரு ஆன்மீக இயக்கமாக முன்னெடுத்தால்தான் முடியும். இப்போதைக்கு அத்தகைய இயக்கத்துக்கான திட்டங்கள் இல்லை. எனினும் இதில் அனுபவமும், ஈடுபாடும், சமர்ப்பண உணர்வும், வசதி வாய்ப்புகளும் கொண்டவர்கள் இணைந்து, காலமும் அனுமதிக்குமானால் நிச்சயமாக அதைச் செய்வோம். உலக நன்மைக்கான அத்தகைய தாந்த்ரீக முன்னெடுப்புக்கு, தாந்த்ரீகத்திற்கு ஆதாரமாக உள்ள ப்ரபஞ்ச ஆற்றலே வழி நடத்தும் என்று நம்புகிறேன். அனைத்தும் ஆற்றல் மயம்! ###### 10. ஓவியத்தில் உங்களது இலக்கு அல்லது லட்சியம் என்ன? ஓவியன் என்ற முறையில் உலக ஓவிய அரங்கே இலக்கு. விலை உயர்ந்த ஓவியங்களை விற்பதில் இந்திய அளவில் முதலாவதாக உள்ள சஃப்ரோன் ஆர்ட் கேலரி(மும்பை)யிலும், உலக அளவில் முதலாவதாக உள்ள க்றிஸ்டி(லண்டன்)யிலும் எனது ஓவியங்கள் விற்கப்பட வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். இது ஓவியத் துறையில் காலடி எடுத்து வைக்கும்போதே கொண்ட லட்சியம். அதை நோக்கித்தான் எனது கலைப் பயணமும். 'கனவு கண்டால் மட்டும் போதாது; அதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்பதை, சாதிக்க நினைக்கும் எவருக்கும் நான் சொல்வது வழக்கம். அதன்படியே நானும் என்னைத் தகுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக எனது வாழ்நாளுக்குள்ளோ, அதற்குப் பிறகோ இந்தக் காட்சியகங்களில் எனது ஓவியங்கள் இடம் பெறும். இந்த தனிப்பட்ட லட்சியத்தைக் காட்டிலும் முக்கியமானது எனது உலக சமுதாயக் கனவு. ஆன்மீக விடுதலையால் மலர்ச்சியுற்ற, அனைத்து மதங்களின் மேன்மைகளையும் தன்வயப்படுத்திக்கொண்டு மத ஒருமைப்பாட்டில் உயர்ந்து நிற்கிற, அன்பாலும் மனித நேயத்தாலும் மெய்ஞானத்தாலும் ஒளிர்கிற - காஸ்மிக் உட்டோபியா! உலகளாவிய ஆன்மீக மானுடம்! அதுதான் என் கனவு. அந்தக் கனவையும், அதற்கான வழிகளையும்தான் ஓவியங்களாக ஆக்கி மக்களுக்கு காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஆயிரம் சஹஸ்ராரங்கள் மலரட்டும்!