தாந்த்ரீகம் : மறைக்கப்பட்ட பேருண்மைகள் 5

சௌந்தர சுகன் இதழில் வெளியான ஓவியரின் நேர்காணலின் பகுதி 5
##### 26. உங்கள் தாந்த்ரீக ஓவியங்களைப் பார்க்கும்போது பெண்ணை நீங்கள் ஆளுமை நிறைந்த சக்தியாக, அனைத்துக்கும் மேலானவளாக, பலவீனமான பாலினம் இல்லை என்று உரத்து சித்தரிப்பதாய் உணர முடிகிறது. இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இவை எனது சித்தாந்தங்களோ, கருத்துகளோ மட்டுமல்ல. தாந்த்ரீகத்தின் கோட்பாடுகள் அவை. இன்னும் சொல்லப் போனால் இந்து மதத்தின் இறையியல் மையமே அதுதான். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, ப்ரபஞ்ச ஆற்றலை பெண் வடிவாக இறைமைப்படுத்தி, ‘ஷக்தி’ எனும் உருக்கொடுப்பாக (embodyment) தரிசிப்பது.அடுத்தது, பெண்ணை ‘ஷக்தி’யாக – அதாவது ஷக்தி எனும் இறைவி வடிவாக தரிசிப்பது. இவை இரண்டுமே இந்து மதம் மற்றும் தாந்த்ரீகத்தின் தனிப் பெரும் சிறப்புகளாகும். எனது ஓவியங்களில் இந்த இரண்டு தரிசனங்களுமே உள்ளன. எனது தாந்த்ரீக ஓவியத்தில் நான் ஒரு பெண் உருவை வரைகிறபோது ஏதோ ஒரு பெண் உருவை மட்டும் வரையவில்லை; ஒட்டு மொத்த பெண் இனத்தையும், ப்ரபஞ்ச ஆற்றலின் பெண் தன்மையான ப்ரக்ருதியையுமே வரைகிறேன். குறிப்பாக எனது இறைவிகள் மற்றும் யக்ஷிகள் இத்தகைய ஆற்றல் உருக்கொடுப்புகளே! ஆற்றலை ஷக்தி எனும் பெண் வடிவாக, ப்ரபஞ்ச மெய்ம்மைப்படியே கண்டதும், கண்டு அறிந்ததும், வெளிப்படுத்தியதும் இந்து மதம் மட்டுமே! மற்ற மதங்கள் யாவும் முதற்கடவுளாக ஆண் கடவுளையே சித்தரிக்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டுமே ஆதிபராஷக்தி என முழு முதற்கடவுளியை முன்னிறுத்துகிறது. தர்க்கப்படியும், அறிவியல்படியும் அதுவே சரியானது. ஏனெனில், படைப்புத் தன்மை என்பது தாய்மைப் பண்பே அன்றி, தந்தைமைப் பண்பல்ல. தாய்மையாக்கத்துக்கு தந்தைமை ஒரு கருவியாக இருக்கிறது, அவ்வளவுதான். இந்த ஆதிபராஷக்தியே ஞான ஷக்தி, க்ரியா ஷக்தி, இச்சா ஷக்தி என மூன்று வடிவில் வெளிப்பட்டு, முறையே சரஸ்வதி, லஷ்மி, ஷக்தி / பார்வதி என ரூபம் கொண்டு, அவர்களின் கணவர்களான மும்மைக் கடவுள்களுக்கு ஆற்றல் வழங்குபவர்களாக இருக்கிறார்கள். இந்த ஷக்திகளை நான் எல்லாப் பெண்மைகளிலும் காண்கிறேன். மானிடப் பெண்களில் மட்டுமல்ல; விலங்குகள், பறவைகள், பிராணிகள், புழு – பூச்சிகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் உள்ள பெண்மையில், தாய்மையில் அதை நான் காண்கிறேன். ஒலிகளில், நிறங்களில், கோடுகளில் கூட ஆண்மையும் பெண்மையும் உண்டு என என்னால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. எனது ஓவியங்களின் நிறங்களிலும், கோடுகளிலும் அதை வெளிப்படுத்துகிறேன். அதன்படி பெண் உருவை வரைகிறபோது, உருவத்தையல்ல, பெண் ஆற்றலையே வரைகிறேன். அந்த ஆற்றல்கள் - ஞானா, க்ரியா, இச்சா எனும் அந்த மும்மை ஷக்திகள் - நீங்கள் குறிப்பிட்டபடியே ஆளுமை நிறைந்தவை; அனைத்துக்கும் மேலானவை. பெண்ணை பலவீனப் பாலினம் என்று வரையறுப்பது ஆணாதிக்கப் பார்வையில் ஒன்று. இயற்கையாகவே உடல் ரீதியாக ஆணளவுக்கு பெண் பலமில்லாதவளாக இருக்கலாம். ஆனால், அதை ஆண்களுக்கு நிகராக பலப்படுத்திக்கொள்ளவும் முடியும். உடல் உழைப்பாளிப் பெண்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீராங்கனைகள், தற்காப்புக் கலை பயின்றவர்கள், பளு தூக்கும் வீராங்கனைகள், பெண் போராளிகள் ஆகியோரின் உடல் உறுதி பற்றி நினைத்துப் பாருங்கள். மேலும் இவர்களின் மன உறுதியும் வலுவானதாகவே இருக்கும். மற்றபடி பொதுவாக உள்ள சாமான்யப் பெண்களே பலவீன உடல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆயினும் பெண்கள் ஆன்ம ரீதியாக பலம் வாய்ந்தவர்கள். ஆண்களின் எத்தகைய கட்டுகளையும் தகர்த்தெறிந்துவிட்டு அவர்களால் எதையும் செய்ய முடியும். அதனால்தான் ஆண் இனம் எப்போதுமே பெண்ணைப் பார்த்து உள்ளூர அச்சப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன்னை மீறி அவள் உயரச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சகல வித தந்திரங்களையும் செய்து, அடிமைப்படுத்தி, ஒடுக்கி வைத்திருக்கிறது. இது பிந்தைய கால தந்தை மையச் சமூகத்திலிருந்து உருவானது. சாக்தம் மற்றும் வாம மார்க்கம் ஆதி மனித சமூகவியலின் தாய் மைய நடைமுறையிலிருந்தும், தாய்த் தெய்வ வழிபாட்டிலிருந்தும் உருவான தொல் முறையாகும். எனவேதான் அது பெண்ணுக்கும், பெண்மைக்கும், பெண் ஆற்றலுக்கும் முதலிடம் கொடுக்கிறது. ##### 27. உடல் அரசியலில் பெண் உடல் புனிதப் போர்வைக்குள் இந்த நவீன அறிவியல் யுகத்திலும் புதைக்கப்படுவதை எதிர்த்து கலகம் செய்வதாக உங்கள் ஓவியத்தை சொல்லலாமா? நிர்வாணம் மற்றும் பாலியல் தொடர்பான எனது ஓவியங்கள் தாந்த்ரீக மெய்ம்மைகளையும், சமூக எதார்த்தத்தையுமே வெளிப்படுத்துகின்றன. ஆனால், ஆணாதிக்கவாதிகள் மதவாதிகள், ஆகியோருக்கு அது கலகமாகவே இருக்கும். ஏனென்றால், நீங்கள் சொல்வது போல அவர்கள் மறைத்து வைப்பதையெல்லாம் எனது ஓவியங்கள் திறந்து காட்டுகின்றன. உடைகளை மட்டும் நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆணாதிக்க உடல் அரசியலையும், ஆண் மைய மதவாதத்தின் புனிதப் போர்வைகளையும்தான். நிர்வாணம், காமம், கலவி ஆகியவை குறித்து நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கற்பிதங்களில் ஒன்றுதான் புனிதம் என்கிற போர்வை. வாஸ்த்தவத்தில் அவை புனிதங்கள் என மெய்யுணர்வோடு சொல்லப்பட்டால் சரிதான். அந்த நிலையில் அவர்கள் இருந்தால் நிர்வாண ஓவியங்களோ, பாலியல் கலை - இலக்கியங்களோ அவர்களுக்கு எந்த தொந்தரவையும் தராது. ஆனால், அவர்கள் புனிதம் என்பதைப் போர்வையாகத்தான் கொள்கிறார்கள். அந்தப் போர்வையால் இந்த “அசிங்கங்களை”யெல்லாம் மூட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். புனிதமுமல்ல, அசிங்கமுமல்ல; அவை இயற்கை என்பதைப் புரிந்துகொண்டால் எந்த சிக்கலுமில்லை. தாந்த்ரீகம் சொல்வது அதைத்தான். தாந்த்ரீகத்திலும் இவை பற்றிய புனிதக் கண்ணோட்டங்கள், கோட்பாடுகள், சடங்குகள் ஆகியன உள்ளன. நிர்வாணம் இயற்கை என்பதையும், காமம் வாழ்வாற்றல் என்பதையும் தெரிவித்து, அதனாலேயே அவை புனிதமானவை என்று அது கூறுகிறது. பாலியல் மூலமே மெய்யறிவையும், பேரின்பத்தையும், இறை நிலையையும் அடைவதற்கு யோக வழி அமைத்துக் கொடுத்துள்ளதல்லவா தாந்த்ரீகம்! அதன் கோட்பாடுகள், சடங்குகள், கலை- இலக்கிய வெளிப்பாடுகள் ஆகிய அனைத்திலும் புனிதம் / அசிங்கம் என்ற புறக் கண்ணோட்டங்களைக் கடந்து, இயற்கை என்னும் அக மெய்ம்மையை உணர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இந்து மதம் மற்றும் பௌத்த வஜ்ராயண ஆலயங்களிலும், எகிப்திய ஆலயங்களிலும் கடவுள் சிற்பங்கள் நிர்வாண நிலையிலும், பல விதமான கலவிக் கோலங்களிலும் இடம் பெற்றிருப்பது இந்த தாந்த்ரீக மெய்ம்மையை வெளிப்படுத்துவதற்காகவும் அதன் தெய்வீகத் தன்மையை உணர்த்துவதற்காகவும்தான். ஆனால், மதவாதிகளும், மத அடிப்படைவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும் இவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. சமகால ஓவியர்கள் கடவுளிகளை நிர்வாணமாக வரைந்தால் மட்டும் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எனது ஓவியங்களுக்கு இத்தகைய எதிர்ப்புகள் வந்தால் அவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் நிறைய கேள்விகளும், சொல்வதற்கு சாஸ்த்ர ரீதியான விளக்கங்களும், காட்டுவதற்கு இந்தியா முழுக்க ஆதாரங்களும் உள்ளன. ##### 28. மன்னர் காலத்தில் தாந்த்ரீகத்தை சாக்காக வைத்து பெண்ணை அடிமைப்படுத்தி / அதீத பெண்நுகர்வுக்கு தந்திரமாக பக்தி என்கிற பாதுகாப்பு வேலிக்குள் ஆணாதிக்கம் பயன்படுத்தி வந்தது என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்து தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவசியம் வாங்கி வாசித்து அது பற்றி அறிய வேண்டும். ஆனால் பொதுவாகவே மன்னர் ஆட்சிக் காலத்தில் மன்னர்கள் எத்தகைய சுக போகங்களில் திளைத்தார்கள் என்பது நமக்குத் தெரியும். பாலியல் நுகர்வைப் பொறுத்த வரை ஒரு மன்னர் ஏக காலத்தில் மூன்றோ ஐந்தோ மனைவிகளுடன் வாழ்வது என்பது வெகு சாதாரணமாக இருந்திருக்கிறது. இது தவிர அந்தப்புரம் என்ற ஏற்பாடு வேறு! அங்கே குறைந்தபட்சம் பதின்மடங்கு இளம் அடிமை அழகிகள் மன்னரின் காமக் களியாட்டத்திற்கெனவே இருப்பார்கள். இதுவும் போக மன்னர் வெளியே செல்கையில் எங்கேனும் அழகுப் பெண்களைக் காண நேர்ந்தால் பொன்னும் பொருளும் கொடுத்தோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ அவளை அடைவதும் தன் அந்தப்புரத்துக்குக் கடத்திவருவதும் வாடிக்கை. தாந்த்ரீகம் என்ற போர்வைக்குள் வராமலேயே பரவலாக இது நடந்திருக்கிறது எனும்போது அப் போர்வையில், பக்தி என்ற பாதுகாப்பில் அது நடப்பது என்பது ஆச்சரியப்படத் தக்கதல்ல.

Image Courtesy : pinterest.com

மன்னர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள் போன்ற பணம் படைத்த அதிகார வர்க்க ஆண்கள் தங்களின் அதீத இச்சையினால் வரலாறு நெடுக இது போன்ற அட்டூழியங்கள் பலவும் செய்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன், சாமான்ய மக்களிலும் ஆண்கள் ஏக காலத்தில் பல மனைவியர்களோடு வாழ்வது நடைமுறையில் இருந்திருக்கிறதே! இந்து மதத்தில் மட்டுமல்ல; இஸ்லாமியத்திலும் இந்த ஆணாதிக்க அதி இச்சை நுகர்வு வழக்கம் இருந்திருக்கிறது; இன்னமும் ஆங்காங்கே இருந்துகொண்டுமிருக்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவிலும் பாலியல் தொழில் என்பது ஆண்களுக்கானதாக மட்டுமே இருக்கிறது. அதாவது விபச்சாரிகள் எனப்படும் பெண் பாலியல் தொழிலாளிகளே ஆண்களின் இச்சைக்கான சமூக ஏற்பாடாக உள்ளனர். இதே போல பெண்கள் தங்கள் இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு ஆண் பாலியல் தொழிலாளிகளால் ஆன சமூக ஏற்பாடு இல்லை. பணம் படைத்த அதி இச்சைப் பெண்கள் இதே போல பணம் கொடுத்து தங்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள ‘ஜிகலோ’(gigalo)க்கள் எனப்படும் ஆண் பாலியல் தொழிலாளிகளைப் பயன்படுத்திக்கொள்வது ஆங்கில வழமை. அது இப்போது இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பரவியுள்ளது எனினும் சமூக ஏற்பாடாக ஆகவில்லை. தனி மனித நடைமுறையாகவே உள்ளது. இது தொடர்பாகப் பேசப் புகுந்தால் அது முற்காலம் தொட்டு உலகெங்கும் நீடித்து வருகிற ஆணாதிக்கக் கற்புக் கோட்பாடுகள், பெண்கள் மீதான மதம் சார்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள், குடும்பங்களில் நிலவுகிற ஆணாதிக்கங்கள், சமூகத்தில் நிலவும் பல்வேறு வகையான பாலியல் தொல்லைகள், வன்முறைகள், கொடுமைகள் போன்ற பல விஷயங்களுக்கும் நம்மை இட்டுச் செல்லும். தாந்த்ரீகத்தைப் பொறுத்தவரை, வாமாச்சார மார்க்கத்தில் பாலியல் யோகம் மூலமாகவே ஆணும் பெண்ணும் பேரின்பத்தையும், அதன் வாயிலாக மெய்ஞானத்தையும் அடைவது என்பதே மையக் கோட்பாடு. இது முற்றிலும் அறிவியல் மயமானதும், இல்லறவாசிகளுக்கானதுமாகும். ஆனால் அது சில தாந்த்ரீக சமயமரபு(sect)களிலும், குழுக்களிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு நீங்கள் குறிப்பிட்டது போன்ற அக்கிரமங்கள் பலவும் நடந்திருக்கின்றன. கன்னி பூஜை, நிர்வாண பூஜை என்ற பெயர்களில் போலிச் சாமியார்கள் பலராலும் கன்னிப் பெண்கள் சீரழிக்கப்பட்ட கொடுமைகள், போலிச் சாமியார்களின் பாலியல் லீலைகள் போன்றவையும் இதோடு சம்மந்தப்பட்டதே! வாம மார்க்கத்தில் யோனி பூஜை என்கிற சடங்கு உள்ளது. அது சம்மந்தமாகவும் சில இடங்களில் இது போன்ற அக்கிரமங்கள் நடந்துள்ளன. திபெத்திய பௌத்த தாந்த்ரீகமான வஜ்ராயனப் பிரிவில் பௌத்த துறவிகள் இப் பூஜைக்காக வயதுக்கு வராத சிறுமிகளையும், குழந்தைகளையும் கூடப் பயன்படுத்தியுள்ளனர். அதில் ஒரு பௌத்த துறவி, ஏழைத் தொழிலாளி ஒருவரின் மகளான ஐந்து வயதுப் பெண் குழந்தையை, அத் தகப்பனுக்கு ஏராளமான பொன் கொடுத்து வாங்கிவந்து பயன்படுத்தியதான குறிப்பை ஒரு இணைய தளத்தில் வாசிக்க நேர்ந்தபோது பதறியடித்து அங்கிருந்து வெளியேறிவிட்டேன். ரகசியக் குழுக்கள், சமய மரபுகள் ஆகியவற்றில் நிகழக்கூடிய கொடுமைகள் இவை. நமக்கு இது தேவையில்லை என்பதால் நான் இது போன்றவற்றில் அக்கறை காட்டுவதில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சுருக்கமான புறத் தகவல்களை மட்டுமே அறிந்துகொள்ள முற்படுவேன். மற்றபடி நமது தேவை சமூகப் பயன் விளைவிக்கக் கூடியதும், இல்லற மக்கள் சார்ந்ததுமான தாந்த்ரீக உண்மைகளே! ##### 29. நீங்கள் அமைக்க இருக்கும் உங்கள் தாந்த்ரீக ஓவியக் கண்காட்சி எப்போது நடக்க இருக்கிறது? அந்த கண்காட்சி வழி பார்வையாளர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்? இப்போது இறுதிக் கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் கண்காட்சி நடத்தலாம் என்ற தீர்மானத்தில் இருக்கிறேன். அக் கண்காட்சி மற்றும் அவற்றில் இடம் பெறவிருக்கும் எனது நவீன தாந்த்ரீக ஓவியங்களின் முக்கிய நோக்கங்கள் இவை: 1. தாந்த்ரீகத்தின் சமகால சூழல் பொருத்தத்தையும், தேவையையும் அறியப்படுத்துவது, 2. தாந்த்ரீகமே இந்து மதத்தின் ஆதாரம் என்பதை நிறுவுவது, 3. தாந்த்ரீகம் குறித்த மறைக்கப்பட்ட பேருண்மைகளை வெளிப்படுத்துவது, 4. துறைசார் ரகசியங்களாக உள்ள தாந்த்ரீக யோக மெய்ம்மைகளில் சமூகம் அறிந்து பயனுற வேண்டியவற்றை அம்பலப்படுத்துவது, 5. தாந்த்ரீகத்தின் நவீன அறிவியல் மற்றும் நவீன உளவியல் தன்மைகளைத் தெரிவிப்பது, 6. வேதாந்தம் துறவிகளுக்கு; தாந்த்ரீகம் மக்களுக்கு என்பதை உணர்த்துவது, 7. தாந்த்ரீகம் வாயிலாக மக்களின் ஆன்ம விடுதலைக்கும், மெய்ஞானத்துக்கும் வழி காட்டுவது. ##### 30. நமது சமூகச் சூழலில் படைப்பாளியாக இயங்குவதன் அனுபவங்களை சொல்லுங்கள்? எனக்கு அதில் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பல வித அனுபவங்கள் உள்ளன. குடும்பச் சூழலிலும், இலக்கியச் சூழலிலும் கூட அப்படித்தான். எனக்கு மட்டுமல்ல; எல்லாப் படைப்பாளிகளுக்கும் இப்படியான அனுபவங்களே இருக்கும். எனவே அவற்றை விடுத்து ஒட்டு மொத்த உலகப் படைப்பாளிகள் நிலை சார்ந்து அவற்றின் காரண காரியங்களை அலசுவது சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன். தமிழ் சமூகம் அல்லது இந்திய சமூகச் சூழலில் மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்திலுமே படைப்பாளிகளாக இயங்குவதன் அனுபவம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. நாம் நினைக்கிறோம், நமது மாநிலத்தில், நமது நாட்டில், அல்லது நம்முடையது போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் படைப்பாளிகளாக இயங்குவது கடினமானது, பாடுகளும் அவலங்களும் துயரங்களும் தரக் கூடியது என்று. இல்லை; படைப்பாளிகளுக்கு உயர் மதிப்பும், கொழுத்த செல்வ வளமும் கிடைப்பதாக உள்ள மேற்கத்திய நாடுகளிலும் அடிப்படை நிலைமை இங்குள்ளதேதான்! வெற்றி பெற்றவர்களும், புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர்களுமான சில நூறு பேர்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். தோற்றவர்களும், வெளிச்சம் தீண்டாதவர்களுமான பல கோடிப் பேர்களை நமக்குத் தெரிவதில்லை. உலக அளவில் ஒவ்வொரு படைப்புத் துறைகள் அல்லது கலைத் துறைகளையும் எடுத்துக்கொண்டால் லட்சக் கணக்கானோர் தோற்றுப்போனவர்களாகவும், நலிவடைந்தவர்களாகவும் இருப்பார்கள். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைச் சரிதங்களையோ, வாழ்க்கைக் குறிப்பையோ எடுத்துப் பார்த்தால் அவர்களில் பலரும் ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் என்பது தெரியும். அது மட்டுமன்றி, கலைஞர்கள் / படைப்பாளிகளின் குணங்கள் உலகம் முழுக்க ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அவர்கள் மீதான சமூகப் பார்வையும், கலைத் துறையில் அவர்கள் இயங்குவது பற்றிய குடும்பக் கண்ணோட்டங்களும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன, திறம் மிக்க கலைஞர்கள், மகத்தான படைப்புகள் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்படுவதும், பிற்பாடு உலகத்தின் கொண்டாடப்படலுக்கு உரித்தாவதும் கூட அவ்வாறே! உலக தீவிர கலைஞர்கள் பலருக்கும் ஆதர்ஷமாக உள்ள வான்கோவின் ஓவியங்கள் இன்று 300 - 400 மில்லியன் டாலர்களுக்கு விலை போகின்றன. ஆனால், கலை என்னும் சிலுவையில் அறையப்பட்ட அந்த ஓவியனின் அவல வாழ்வில் அவனது ஒரு ஓவியம் கூட விற்பனையாகவில்லை. பாப் இசையுலகின் முடி சூடாப் பேரரசியான ஷகீரா, பள்ளிக் காலத்தில் அவளது ஆசிரியையால், “அவள் ஆட்டைப் போலக் கத்துகிறாள்!” எனக் கூறப்பட்டு, பாட்டுக் குழுவிலிருந்து ஒதுக்கப்பட்டவள். அவல வாழ்வில் அகால மரணமுற்ற மகாகவி பாரதியும், மகா கதைஞன் புதுமைப் பித்தனும் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தம் படைப்புகளால் உயிர்த்தெழுந்து அமரர்களானார்களே நம் மண்ணில்! ஆயிரத்தாண்டுகளாக வானுயர்ந்து நிற்கிறார்களே வள்ளுவனும், கம்பனும், ஷேக்ஸ்பியருமெல்லாம்! வீட்டில் மளிகை காலி – பால் பாக்கி பிரச்சனைகளும், சமூகத்தில் மதிப்பின்மையும் எல்லா ஏழை மக்களுக்கும் உள்ளதுதான். ஆனால், படைப்பாளிகளின் போராட்டம் இதோடல்ல; காலத்தோடு. தமது படைப்புகளால் அதை வென்று நிற்க வேண்டும் என்பதே அவர்களின் லட்சியமும், போராட்டமுமாக இருக்கிறது. அதில் அவர்கள் தோற்றுப்போனாலும், வரலாறு தன் பக்கங்களில் அவர்களைப் பதிக்காமல் புறக்கணித்தாலும், அந்த லட்சியம் மதிக்கப்படவேண்டியது. ##### 31. உங்களின் இதுவரையிலான சாதனைகள் என்ன? எதிர்கால திட்டங்கள், இலட்சியங்கள் என்ன? இதுவரை நான் எதையும் சாதிக்கவில்லை. சொல்லிக்கொள்ளும்படியாக ஏதோ சில கதைகளையும், கவிதைகளையும் எழுதியிருக்கிறேன். அவற்றில் சிலதேனும் பொருட்படுத்தத் தக்கதான தரத்துடன் உள்ளன என்பது மட்டுமே எனது கடந்த காலத்தின் எழுத்து வாழ்வு பற்றிய எனது மதிப்பீடு. மற்றபடி இலக்கியத்தில் நான் தோற்றுப்போனவன். ஆயினும் இலக்கிய அனுபவங்களே இன்றைய எனது நவீன தாந்த்ரீக ஓவியன் பரிமாணத்துக்கு மூலாதாரமாகவும், அடி உரமாகவும் இருக்கிறது. இந்த நேர்காணலின் முதல் கேள்வியிலேயே நீங்கள் குறிப்பிட்டீர்கள், எனது அடிப்படைப் படைப்புத் திறன் ஓவியமாக இருந்திருக்கிறது என்று. ஆனால், தாந்த்ரீக ஓவியங்களை வரைகிற வரை எனக்கு அது தெரியவில்லை. அதன் தொடக்கத்தில் சில முக்கிய ஓவியங்களை வரைந்திருந்தபோதும் கூட அவை குறித்து எனக்கு பெரிய மதிப்பீடு ஒன்றும் இல்லை. அந்த ஓவியங்களைப் பார்த்த எங்கள் ஊரைச் சேர்ந்த சில நண்பர்கள், ஒரு சில உறவினர்கள், அதைவிட ஓரிரு வழிப்போக்கர்கள் ஆகியோர் தெரிவித்த கருத்துகள்தான் அவ்வோவியங்கள் பற்றிய மதிப்பு என்பதை விட, சரியாகத்தான் செய்திருக்கிறோம் என்ற திருப்தியை எனக்கு ஏற்படுத்தின. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், கலை, ஆன்மீகம், யோகம், தாந்த்ரீகம் போன்றவை குறித்த அறிவுகள் ஏதுமற்ற சாமான்ய மக்கள் அவர்கள். அவர்களுக்கும் எனது ஓவியங்கள் போய்ச் சேரவேண்டும், அதன் செய்திகள் அவர்களையும் அடைய வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதே போல எனது இணையதளம் தொடங்கப்பட்டதுமே, அதிலுள்ள எனது தாந்த்ரீக ஓவியங்கள், தாந்த்ரீகக் கவிதைகள், தாந்த்ரீகம் குறித்த கட்டுரைகள் ஆகியவை மிகக் குறைவாக இருந்தபோதும் அவை குறித்து சக இலக்கியவாதிகள் சிலரிடமிருந்தும், பழக்கமுள்ள சில பேராசிரியர்களிடமிருந்தும் வந்த பாராட்டுவினைகளும் எதிர்பாராத அளவில் இருந்தன. எனவே, அறிவுத் தளத்துக்கும் ஏற்ற வகையிலேயே எனது ஓவியங்கள் உள்ளன என்பதும் நிரூபணமாகிவிட்டது. அடுத்துள்ளது விற்பனைத் தரப்பு. இந்த ஓவியங்களை வாங்கக் கூடிய நுகர்வோர்களிடம் இவற்றுக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பது கண்காட்சியில்தான் தெரியும். அதை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட முடியும். மற்றபடி, எனது லட்சியம் உலகச் சந்தைதான். அது உடனடியாக நடந்துவிடக் கூடியதல்ல. சிறிது காலம் பிடிக்கும். கனவுகளோடும், லட்சியங்களோடும் இருக்கிற எனது படைப்பாள நண்பர்களிடமும், உறவின இளைஞர்களிடமும் நான் சொல்வதுண்டு, “வெறுமனே லட்சியங்களை மட்டும் ஏற்படுத்திக்கொண்டால் போதாது; அதை அடைவதற்கு சகல விதங்களிலும் நம்மைத் தகுதிப்படுத்திகொள்ள வேண்டும்” என்று. அதன்படியே என்னையும் எனது லட்சியத்துக்குத் தகுதிப்படுத்திக்கொண்டேயிருக்கிறேன். > **இலக்கியத்தில் நான் தோற்றுவிட்டேன்; ஆனால், ஓவியத்தில் தோற்க எனக்கு அனுமதியில்லை. என்னால் தோற்கவும் முடியாது.**

*********