தாந்த்ரீகம் : மறைக்கப்பட்ட பேருண்மைகள் 4

சௌந்தர சுகன் இதழில் வெளியான ஓவியரின் நேர்காணலின் பகுதி 4
##### 22. இந்துத்துவத்தின் மிக முக்கிய அம்சமான தாந்த்ரீகம் பற்றி கூறுங்கள்... இந்துத்துவம் என்ற சொல்லாடலை நான் ஏற்றுக்கொள்வதில்லை. அது மிகத் தவறானது, திருத்தப்படவேண்டியது என்பது எனது கருத்து. ஏனெனில், இந்துத்துவம் என்ற சொல், பொதுவாக பார்ப்பன ஆதிக்கக் கருத்தியல்களையும், அதன் மூலம் ஏற்படுகிற மத அடிப்படைவாதத்தையுமே அடையாளப்படுத்துகிறது. ஆனால், பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்கள் அல்லவே! த்ராவிடர்களும், பழங்குடியினரும் கூட இந்துக்கள்தானே! எனவே இத்தகைய பார்ப்பன மதவாத / ஆதிக்க செயல்களைக் குறிக்க பார்ப்பனியம், ப்ராமணத்துவா போன்ற சொல்லாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்பது எனது தரப்பாக இருக்கிறது. நீங்கள் இப்போது பொதுவாக இந்து மதத்தின் தன்மை என்கிற அர்த்தத்திலேயே இந்துத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. எனவே, நாம் உங்கள் கேள்விக்கு வருவோம்.

Image Courtesy : pinimg.com

தாந்த்ரீகம் இந்து மதத்தின் முக்கிய அம்சம் மட்டுமல்ல; அதன் இறையியல், ஆன்மீகம், யோகம், ப்ரம்மஞானம், மெய்யியல் உள்ளிட்ட அனைத்துமே அதன் அடிப்படையிலானவைதான். இந்து மதத்தினரின் சமய நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், அன்றாட வாழ்வியலின் அனேக பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தாந்த்ரீகமே உட்பொருளாக உள்ளது. வேதாந்தம் எனப்படுகிற, வேதங்களின் இறுதிப் பகுதியில் உள்ள உபனிஷத்துக்கள் யாவும் தாந்த்ரீக யோகத்தின் விளக்கங்களே! புராணங்களில் உள்ள பல கதைகளும், பக்தி இலக்கியங்களில் பலவும் கூட தாந்த்ரீக உட்பொருள் கொண்டவையே! இது பற்றி எனது இணையதளத்திலுள்ள ‘தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி’ என்ற தலைப்பிலான மூன்று அத்தியாயக் கட்டுரையில் விளக்கியுள்ளேன். தாந்த்ரீகம் என்றால் என்ன என்பதிலிருந்து, அது எவ்வாறு இந்து மதத்தின் ஆதார ஸ்ருதியாக இருக்கிறது, இந்துக்களின் அன்றாட வாழ்வியலிலும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது வரை அடிப்படை விளக்கங்களை அதில் அறியலாம். இந்து மதத்தின் சைவம், சாக்தம், வைஷ்ணவம் ஆகிய மூன்று உட் பிரிவுகளிலும் தாந்த்ரீகம் உள்ளது. எனினும் தாந்த்ரீகத்தின் முழுக் கோட்பாடும் அடங்கியது, தாந்த்ரீகத்தாலேயே உருவானது, வேத காலத்துக்கும், சிந்துவெளி நாகரீக காலத்துக்கும் முற்பட்ட தொல் த்ராவிட சைவ – சாக்த மதங்கள்தான். அதன் தோற்றுவாய் தொல் பழங்குடித் தாய்த் தெய்வ வழிபாடு. இவைகளை ஆதாரமாகக் கொண்டே பிந்தைய கால இந்து மதம் பார்ப்பனமயமாக்கலோடு வடிவமைக்கப்பட்டது. சைவம் தந்தைத் தெய்வ வழிபாட்டிலும், சாக்தம் தாய்த் தெய்வ வழிபாட்டிலுமானது என்பது பரவலாகத் தெரிந்தது. இவை பக்தி மார்க்கங்கள். இவற்றின் யோக வடிவங்களே தக்ஷிணாச்சாரம் மற்றும் வாமாச்சார தாந்த்ரீகங்கள். சிவ வடிவங்களைத் தமது கடவுளாகக் கொண்டு, குண்டலினி யோகம் வாயிலாக பேரின்பம் எனப்படுகிற இறைநிலையையும், மெய்ஞானத்தையும் அடைவதை நோக்கமாகக் கொள்வது வலது மார்க்கம் எனப்படுகிற தக்ஷிணாச்சாரம். ஷக்தி வடிவங்களைத் தமது கடவுளிகளாகக் கொண்டு, பாலியல் யோகம் வாயிலாக குண்டலினியை எழுப்பி பேரின்பம் எனப்படுகிற இறைநிலையையும், மெய்ஞானத்தையும் அடைவதை நோக்கமாகக் கொள்வது இடது மார்க்கம் எனப்படுகிற வாமாச்சாரம். பொதுவாக தக்ஷிணாச்சாரம் துறவிகளுக்கானது, வாமாச்சாரம் இல்லறத்தவர்களுக்கானது. எனினும் தக்ஷிணாச்சாரத்தில் இல்லறத்தவர்களும், வாமாச்சாரத்தில் துறவிகளும் இருக்கிறார்கள். அவர்களது யோகப் பயில்வுகள் அவரவர் சார்ந்த சமய மரபுப்படியே இருக்கும். தாந்த்ரீகமே இந்து மதத்தின் ஆதாரமாக இருந்தபோதும், அதன் கோட்பாட்டு விளக்கங்களை உணர்த்தும் பல்வேறு அம்சங்கள் சாமான்ய மக்களின் பக்தி மார்க்கத்திலும், இல்லற வாழ்வின் அன்றாட நடைமுறைகளிலும் கூட நிறைந்துள்ளபோதும், அது குறித்த உண்மைகள் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. பாலியலைச் சிற்றின்பம் என்றும், கீழ்மையானது என்றும் இழித்துரைத்து, அதை விடுத்து கடவுளை அடைவதையே பேரின்பம் என்றும், இல்லற வாழ்விலிருந்து விடுபட்டு துறவறம் அடைந்து தவ வாழ்வில் ஈடுபடுவதே மோட்சம் எனப்படும் விடுதலைக்கான வழி என்றுமே மக்கள் தரப்புக்குச் சொல்லப்படுகிறது. இது தந்தைத் தெய்வ மையம் கொண்ட பார்ப்பன வேதாச்சார இறையியலாகும். தாய்த் தெய்வ மையம் கொண்ட நமது த்ராவிட இறையியல் இதற்கு நேர் எதிரானது. அது இல்லறத்திலிருந்தே, அதுவும் வேதாச்சாரம் மறுக்கிற பாலியலை ஆதாரமாகக் கொண்டே கடவுள் நிலையை அடைவதற்கான தாந்த்ரீக யோகவியலாகும். வாமாச்சாரம் அதற்கான பாலியல் யோக வழிமுறைகளினால் ஆனது. நான் வாமாச்சாரக் கோட்பாட்டியலைச் சார்ந்தவன் என்றாலும் அதுதான் பெரிது என்றோ, அதுவே சரியானது என்றோ சாதிக்கிறவனல்ல. எனது தாந்த்ரீக இயங்கியலில் தக்ஷிணாச்சாரக் கோட்பாடுகளும் கலந்தே இருக்கும். ஏனெனில் அவை இரண்டுமே தேவையானவை என்பதோடு, அவை இரண்டும் சேர்ந்ததே முழுமையானதும் கூட. அத்வைதக் கருத்தியல் என்பதும் அதுவே! கடவுளும் மனிதனும் வேறு வேறல்ல; இரண்டும் ஒன்றே அல்லது இரண்டும் ஒன்றாக முடியும் என்பதே அத்வைதம். சார்வாக – சாங்கிய – தாந்த்ரீக யோக மரபுக் கோட்பாட்டியல்களின்படி கடவுள் இல்லை; கடவுள் தன்மை என்பதே உண்டு. மனிதர்கள் யோகம் வாயிலாக கடவுள் நிலையை / நிலைகளை அடைய முடியும் என்பதே அவற்றின் கருத்தியல். அதே போலத்தான் ஆண் – பெண் என்கிற இருமையிலும். உயிரினங்களில் மட்டுமல்ல; ப்ரபஞ்சத்தின் அனைத்துக் கூறுகளிலும் இத் தன்மை உண்டு. அதுவே புருஷன் – ப்ரக்ருதி, பொருள் – ஆற்றல், சிவம் - ஷக்தி முதலான தத்துவங்கள். இந்த இரண்டும் சேர்ந்ததே முழுமை. ப்ரபஞ்ச தத்துவம் மற்றும் தாந்த்ரீக யோக கோட்பாட்டியல்படி ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் தன்மையும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மையும் உண்டு. தக்ஷிணாச்சார மார்க்கத்தில் குண்டலினி யோகம் வாயிலாக இந்த ஆண் – பெண் தன்மைகள் இரண்டற ஒன்று கலக்கப்படுவதன் மூலம் யோக லட்சியங்கள் அடையப்படுகின்றன. வாமாச்சாரத்தில் நேரடியாக ஆணும் பெண்ணுமே ‘மைதுனம்’ எனப்படுகிற கலவி யோகம் வாயிலாக ஒன்று கலந்து, இரண்டற ஐக்கியப்படுவதன் வாயிலாக யோக லட்சியங்கள் அடையப்படுகின்றன. இவ் வகையில் பார்க்கும்போது தக்ஷிணா மார்க்க யோகம் துறவிகளுக்கே பொருத்தமானது என்றும், இல்லறத்தவர்களுக்கு வாம மார்க்கமே பொருத்தமானது என்பதும் வெளிப்படையாகவே தெரிய வரும். நான் சமூக அக்கறை கொண்டவன், மக்களின் ஆன்ம விடுதலையை நோக்கமாகக் கொள்பவன் என்பதால், இல்லறவாசிகளால் நிறைந்த மக்கள் சமூகத்துக்கு ஏற்ற வாமாச்சாரத்தை அவர்களுக்கு பரிந்துரைப்பவனாகவும், அது சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறவனாகவும் இருக்கிறேன். ##### 23. இந்து மதத்தின் ஒரு கூறாக தாந்த்ரீகம் இருப்பதால் அதை பிற மதத்தவர்கள் எப்படி உள்வாங்குவார்கள், அவர்கள் பார்வை எப்படி இருககும் என்கிற கவலை ஏதாவது உங்களுக்கு உண்டா? அது குறித்த கவனமும், அக்கறையும், பொறுப்புணர்வும் எனக்கு இருக்கிறது. ஆனால், கவலை இல்லை. ஏனெனில், அதில் கவலைப்பட எதுவுமில்லை. அதில் சமூகத்துக்கோ, மதங்களுக்கோ விரோதமான கருத்தியலோ, இயங்கியலோ கிடையாது. மேலும், அது அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. எனவே, மற்ற மதத்தினர்களும் தாந்த்ரீகத்தை அறியவேண்டும், பின்பற்றிப் பயனுற வேண்டும் என்பதே எனது எண்ணம். தாந்த்ரீகம் இந்து மதத்தின் ஏதோ ஒரு கூறு மட்டுமல்ல; அதன் மையக் கூறே அதுதான். எனினும் அது இந்து மதத்துக்கு மட்டுமே உரித்தானதல்ல. அனைத்து மதங்களுக்கும், மதம் சாராதவர்களுக்கும், மத நம்பிக்கைகளோ, கடவுள் நம்பிக்கையோ இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அது தொன்மை மிக்க இந்து மதத்தின் தொல் த்ராவிட யோகியர்களால் கண்டறியப்பட்ட, ப்ரபஞ்ச மெய்ம்மை (cosmic realities) அடிப்படையிலான யோக அறிவியல் பேருண்மை. பிந்தைய வேதகாலத்தின் ப்ராமண மற்றும் த்ராவிட ஞானியர்களாலும், யோகியர்களாலும் அதன் கோட்பாடுகள் வளப்படுத்தப்பட்டு, அன்றைய கால வழமைக்கு ஏற்றபடி இறையியலோடு சம்மந்தப்படுத்தப்பட்டுள்ளன. குறியீடுகளாகவும், உருவகங்களாகவும், உருக்கொடுப்புகளாகவும் உள்ள கடவுள் உருவங்களை நீக்கிவிட்டு, அவற்றின் உட்பொருளைப் பார்த்தால் அது அனைத்து மதங்களுக்கும் பொதுவான அறிவியல் மெய்ம்மையே! ப்ரபஞ்ச ஆற்றல், பஞ்ச பூதங்கள், மனிதர்களின் உடல் மற்றும் மூளை சம்மந்தப்பட்ட புலனறிவுகள், மனித உடலில் உள்மறை ஆற்றலாக (latend power) உள்ள குண்டலினி, அதன் ஆற்றல் தேக்க மையங்களாக உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்கள் ஆகியவையே தாந்த்ரீக யோகத்தின் அடிப்படை மூலகங்கள். தாந்த்ரீக யோகம் நவீன அறிவியலின் ப்ரபஞ்ச மெய்ம்மைக் கோட்பாடுகளையும், நவீன உளவியலின் ப்ரக்ஞைக் கோட்பாடுகளையும் வேத காலம் மற்றும் அதற்கு முந்தைய காலத்திலேயே கண்டறிந்து, அதன் அடிப்படைகளிலேயே இயங்குகிறது என்பது வியந்து தீராத காரியமாகும். ஆனால், அதில் புறநோக்கிலான (objective) அறிவியல் மட்டுமன்றி, அகநோக்கிலான (subjective) மெய்யியலும் (mystisism), மீயறி இயற்பியலும் (metaphysics) சேர்ந்து மதத்தன்மையாக முழுமை பெறுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. தாந்த்ரீகம் இந்து மதத்தில் மட்டுமல்ல; அது மற்ற மதங்களிலும், மற்ற நாடுகளிலும் இருக்கிறது. இந்து மதத்திலிருந்து கிளைத்த ஜைன மதம், பௌத்த மதம் ஆகியவற்றிலும் தாந்த்ரீகப் பிரிவுகள் உள்ளன. குறிப்பாக, திபெத்தில் உள்ள பௌத்த மதத்தின் ஒரு பிரிவான வஜ்ராயணம் அதில் மிகப் பிரசித்தி பெற்றது. தாந்த்ரீக வழமைகளில் செழித்த அந் நாடு முழுதுமே மந்திர பூமிதான் என்று சிலாகிப்பார் ஓஷோ. இந்த ஜைன, பௌத்த தாந்த்ரீகங்கள் இந்து தாந்த்ரீகத்தை அடியொற்றியவையே! சீனாவில் உள்ள தாவோயிஸமும் தாந்த்ரீக வழமைகள் கொண்டதே! இந்து மதம், வாமாச்சார தாந்த்ரீகம், காமசூத்ரா போன்றவற்றின் வெளிப்படையான தாக்கங்களையும், சீனமயப்படுத்தல்களையும் தாவோயிஸத்தில் காணலாம். யூத மதம் இந்து தாந்த்ரீகக் கோட்பாட்டைத் திருடி, அதை எதிரிடையாகத் திருப்பும் புரட்டைச் செய்திருக்கிறது. யூத மதத்தின் வேதமான விவிலியத்தின் ஆதியாகமத்தில் இடம் பெறும் ஆதாம் – ஏவாள், கடவுள் - சாத்தான் ஆகியோர் சம்மந்தப்பட்ட ஏதேன் புராணிகம் முழுக்க தாந்த்ரீகம் தொடர்பானதே! இந்து தாந்த்ரீகத்தின் குண்டலினிப் பாம்பு உருவகமே யூத மதத்தில் பாம்பு வடிவிலான சாத்தான் எனப்படுகிறது. இங்கே குண்டலினி கடவுளாக வழிபடப்படுகிறது. மும்மைக் கடவுள்களின் கடவுள் நிலைக்கும் அதுவே காரணமாக உள்ளது. யூத மதம் அந்தப் படிமங்களை எடுத்துக்கொண்டு அதை அப்படியே நேர் எதிராகத் திருப்பிவிட்டது. மெய்ஞான விருட்சத்தையும் படைத்துவிட்டு, அதன் கனிகளைப் புசிக்கக் கூடாது என்று தடை விதித்தவர்தான் அங்கே கடவுள்! அக் கனிகளைப் புசிக்கச் செய்து, அவர்களின் ஞானக் கண்ணைத் திறந்து, அவர்களை தேவர்களுக்கு சமமாக ஆக்கியவர் சாத்தான்! ஆதாமும் ஏவாளும் உடலுறவு கொண்டது யூதத்துக்குப் பாவம். என்ன ஒரு வேடிக்கை பாருங்கள்! மனிதர்கள் உடலுறவும் கொள்ளக் கூடாது, மெய்யறிவும் பெறக்கூடாது என்று ஒரு மதம் சொல்கிறது. கோடிக் கணக்கான மக்கள் அது குறித்து கேள்வி கேட்காமல் அதை வேதம் என ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மெய்யறிவு பெறவில்லை. ஆனால், “பாவம்” செய்வதையும் அவர்களால் கைவிட முடிவதில்லை. இது சம்மந்தமாக எனது ஒரு சிறு எதிர் கவிதை உள்ளது.
**சாத்தான் கனிகள்**
_"சாத்தானே மெய்யான தேவன் என்கிற ஞானம் எனக்கு வந்தபோது நான் விருட்சமாகிவிட்டேன் என் கனிகள் உங்களால் விலக்கிவைக்கப்பட்டபோது நான் சாத்தானுமாகிவிட்டேன்"_
\-- இந்த விஷயங்கள் தொடர்பாக சில தாந்த்ரீக ஓவியங்களையும் வரைந்திருக்கிறேன். க்றிஸ்துவ மதம் யூதத்திலிருந்து கிளைத்தது என்பதோடு, யூத விவிலியத்தையே பழைய ஏற்பாடு எனும் பெயரில் தனது வேதத்தின் ஒரு பகுதியாகவும் கொள்கிறது. எனவே அதிலும் ஏதேன் புராணிகமும், யூதத்தின் பாவக் கொள்கையும் இடம் பெறுகின்றன. இது தவிர ஏசு இந்தியாவுக்கு வந்து யோகம் கற்றுக்கொண்டவர் என்றும், பௌத்த மற்றும் இந்து மதக் கருத்துகள் பலவும் அவரது போதனைகளில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் ஆய்வுகள் உள்ளன. ஏசு நிகழ்த்திய அற்புதங்கள் பலவும் நமது யோக வழமையில் உள்ள அஷ்டமா சித்திகளில் ஆனவைதான். நீர் மேல் நடந்தது, அப்பம் / மீன் / ஒயின் பெருக்கியது, குஷ்டரோகிகளையும் பிறவியிலேயே ஊனமானவர்கலையும் குணமாக்கியது, இறந்தவனை உயிர்ப்பித்தது போன்றவற்றை நினைவுகூர்க. ஏசுவின் பிறப்பை ஒட்டி நிகழ்ந்த சம்பவங்கள் இந்து மதத்தின் க்ருஷ்ணாவதாரப் பிறப்பைத் தழுவி / இலக்கியத் திருட்டு செய்து எழுதப்பட்டவை என்ற, மிக நம்பத்தக்க கருதுகோளும் உள்ளது. க்ருஷ்ணா – க்றிஸ்து என்ற பெயர் ஒற்றுமையும் இதற்கு ஆதாரமாக்கப்படுகிறது. ஆக, யூதம், க்றிஸ்துவம் இரண்டின் வேதங்களிலும் தாந்த்ரீகத்தின் தாக்கம் உள்ளதை அறியலாம். இது தவிர மேற்கு நாடுகளில் இம் மதங்களுக்கு எதிரான சாத்தானிஸம் என்னும் இடது மார்க்க தாந்த்ரீக வழமையும் உள்ளது. வாமாச்சார சமய மரபுகளில் உள்ளது போலவே அதிலும் ரகசிய பாலியல் சடங்குகள், கருப்பு மாந்தரீகம் ஆகியவைகளும் உள்ளன. இத் தரப்பிலுள்ள யோகினிகளையே கிறிஸ்துவ மத அடிப்படைவாத வெறியர்கள் சூனியக்காரிகள் என்று தீக்கிரையாக்கிக் கொன்றனர் என்பதும் நினைவுகூரத் தக்கது. இஸ்லாமியத்திலும் தாந்த்ரீக வழமைகள் உள்ளன. அதில் கருப்பு மற்றும் வெள்ளை மாந்தரீக வழமைகள் உள்ளது பரவலாக அறியப்படுவதே. இஸ்லாமிய ஆச்சார மரபுக்கு எதிரான இயங்கியல் கொண்ட சூஃபி ஞானிகள் தாந்த்ரீக வழிப்பட்டவர்களே! அவர்களின் தத்துவ நெறிகளில் தாந்த்ரீகக் கோட்பாடுகளைக் காணலாம். சூஃபி ஞானியர் சிலர் இந்தியாவில் தாந்த்ரீகமும், மாந்தரீகமும் கற்றுக்கொண்டவர்கள். இந்திய மரபு ஓவியங்களின் சிற்றோவியப் பிரிவில் காமசூத்ரா பாலியல் நிலைச் சித்தரிப்புகள் கொண்ட முகல் ஓவியங்கள் சிறப்பிடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கது. தனி ஓவியங்கள் தவிர உருது மொழி சித்திர எழுத்து(calligraphy)களுடன் உள்ள கையெழுத்துப் பிரதி நூலாக்கங்களில் நுண் ஓவியங்களாகவும் இத்தகைய பாலியல் சித்தரிப்புகள் இடம்பெற்றுள்ளன. கே (gay) மற்றும் லெஸ்பியன் சம பால் புணர்ச்சிகளும் கூட இவற்றில் அப்பட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஜொராஸ்ட்ர மதத்திலும் தாந்த்ரீக வழமைகள் உள்ளதோடு, அதன் அடிப்படையிலான பெர்ஷியன் பாலியல் ஓவியங்களும் உள்ளன. ஆக, இந்த அளவுக்கு மற்ற மதங்களிலும் தாந்த்ரீக வழமைகள் உள்ள நிலையில், நான் வரைவதும் பேசுவதுமா தவறாகிவிடப்போகிறது? இல்லாததைச் சொல்வதுதான் பொய், தவறு. இருப்பதைச் சொல்வதில், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவதில் தவறில்லையே...! எனவே, நான் ஏன் கவலைப்பட வேண்டும்? ##### 24. இந்திய தாந்த்ரீக மரபு ஓவியங்களைப் பற்றிக் கூறுங்கள்....

Monks preparing mandala.
Image Courtesy : pixabay.com

தாந்த்ரீக மரபு ஓவியங்களில் பொதுவாக ஆறு வகைகளைக் காணலாம். 1. தாந்த்ரீகச் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் இடம்பெறுகிற தரை ஓவியங்கள், 2. மாந்தரீகப் பயன்பாட்டில் உள்ள யந்த்ரங்கள் / மண்டலங்கள், 3. தாந்த்ரீக சமய மரபுகளில் உள்ள பல வகை ஓவியங்கள், 4. ஆலயங்களில் இடம் பெறும் சுவர் ஓவியங்கள், 5. மக்கள் படைப்பாக்கங்களிலும் பயன்பாட்டிலும் உள்ளவை, 6. குகைகள் மற்றும் பாறைகளில் உள்ள சடங்கியல் சார்ந்த தொல் ஓவியங்கள். தாந்த்ரீகச் சடங்குகளில் இடம்பெறும் தரை ஓவியங்கள், தாந்த்ரீக வழிபாட்டில் இடம் பெறும் யந்த்ரங்கள் ஆகியவை நுண்கலை வகைமையில் அடங்குமா என்கிற கேள்வி எழலாம். முன்பே சொன்னது போல இந்திய மரபில் கலை – கைவினை என்ற பேதங்கள் இல்லை. மேலும் அலங்கார நோக்கம் மட்டுமன்றி இறையியல் மற்றும் வாழ்வியல் பயன்பாட்டு நோக்கங்களும் கொண்டவையே இந்து மரபுக் கலைகள் என்பதையும் பார்த்தோம். எனவே, இது போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு இந்திய / இந்துக் கலை மரபை நாம் வகைப்படுத்த முடியாது. அதிலும் குறிப்பாக வழிபாடு, சடங்கு, சக்தியூட்டல், மாந்தரீகம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் தாந்த்ரீக வழமையில் இத்தகைய பயன்பாடுகள் மிகுதியும் கூட. தவிர கலை வரலாறு மற்றும் கலைக் கோட்பாடு குறித்த மேற்கத்திய நூல்கள் சிலவற்றிலும் சடங்குக் கலைகள், கோட்பாடுகள் குறித்த கவனம் கொள்ளப்படுகிறது. கைவினைகளும் அவ்வாறே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கேரளத்தின் களமெழுத்து, கர்நாடகத்தின் நாகமண்டலம் போன்றவை தாந்த்ரீகச் சடங்குகளில் வரையப்படும் தரை ஓவியங்களாகும். யந்த்ரங்கள் / சக்கரங்கள் / மண்டலங்கள் எனப்படுகிற வரி வடிவ வரைகலை தாந்த்ரீகத்தில் மிக முக்கியமான அம்சமாகும். அது தாமிரம், வெள்ளி போன்ற உலோகத்தகட்டில் வரையப்பட்டு மாந்தரீக நோக்கங்களுக்காக ஆலயங்கள், வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்களில் பயன்படுத்தப்படுவதோடு, தாயத்துகள் செய்தும் அணியப்படுவது பரவலாக அறியப்படக் கூடியது. இவை காகிதம், துணி, கித்தான் போன்ற பிற வகை மேற்பரப்புகளில் வண்ண ஓவியங்களாகவும் ஆக்கப்படுகின்றன. தாந்த்ரீக சமய மரபுகளில் மண்டல ஓவியங்கள், தாந்த்ரீக தெய்வ உருவ ஓவியங்கள், கோட்பாட்டு விளக்க ஓவியங்கள் ஆகிய வகைகள் உள்ளன. இவை தரை, சுவர், துணி, காகிதம் போன்ற பல வகை மேற்பரப்புகளிலும் வரையப்படும். இதில் ரகசியப் புழக்கத்துக்கு மட்டுமேயான பாலியல் சித்தரிப்பு ஓவியங்களும் இருக்கும். ஆலயச் சுவர்களிலும் கூரையிலும் இடம் பெறக்கூடிய தாந்த்ரீக ஓவியங்கள் இறைமை உருக்கள், புராணச் சித்தரிப்புகள் ஆகியவற்றால் ஆனவை. கைவினை ஓவியர்கள் மற்றும் சாமான்ய மக்களால் வரையப்படுகிற பல வகை இந்திய மரபு ஓவியங்களிலும் தாந்த்ரீக தெய்வங்கள், மண்டலங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்டதாகவோ, முற்பட்டதாவோ உள்ள பற்பல குகை ஓவியங்கள் தாந்த்ரீகச் சடங்குகளோடு சம்மந்தப்பட்டவை. ##### 25. உங்களை தாந்த்ரீக ஓவியராக மாற்றியது எது? தாந்த்ரீகத்தை உங்கள் ஓவிய ஊடகமாக நீங்கள் எடுத்ததன் முக்கிய நோக்கம் என்ன? 2010-க்கு முன்பு வரை எனது முதன்மை ஊடகம் எழுத்தாகவே இருந்தது. ஓவியம் குறித்து நான் தேடித் தேடி, அவ்வளவு சிரமப்பட்டுத தெரிந்துகொண்டிருந்தாலும் ஓவியத்தை எனது தொழிலாகக் கொள்ளலாம் எனத் தோன்றியதே இல்லை. அவ்வப்போது ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்தாலும் அப்போது அது எனக்கு இரண்டாம் பட்சமே. கிட்டத்தட்ட பொழுதுபோக்கு ஓவியன், அல்லது அமெச்சூர் ஓவியன் என்கிற நிலைதான். சிற்றிதழ்களுக்காக வரைவதில் மட்டுமே சற்று தீவிரமாகவும், கருத்தாக்கங்களுடனும் வரைவேன். வாஸ்த்தவத்தில் அப்போது நான் ஓர் ஓவியனும் கூட என்று சொல்லிக்கொண்டதே இத்தகைய சிற்றிதழ் ஓவியங்களினால்தானேயன்றி வெளியில் அவ்வப்போது வரைந்துகொடுக்கிற, படைப்பு சாராத ஓவியங்களினால் அல்ல. இலக்கியத்துக்கு வந்த காலம் முதலாகவே எனக்கு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு. இலக்கிய நூல்கள் தவிர ஆன்மீகம், தத்துவம், அறிவியல், உளவியல், புராணங்கள், இதிகாசங்கள் என பல் துறை நூல்களையும் வாசிப்பேன். குறிப்பாக ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவன். அதிலும் ஓஷோ எனது ஆன்மீக குரு என்பதால் அவரது நூல்களில் அலாதி விருப்பம். பல வருடங்களுக்கு முன்பே தாந்த்ரீகம் குறித்த அவரது நூலான ‘பாலியலிலிருந்து கடவுளுக்கு’ என்னும் நூலை வாசித்திருக்கிறேன். அதில் தாந்த்ரீகம் குறித்த அறிமுகம் ஏற்பட்டிருப்பினும் அது குறித்து கூடுதலாக அறிய வேண்டும் என்ற எண்ணம் ஏதும் உண்டாகியிருக்கவில்லை. எனது இயல்புப்படியே பல்துறை வாசிப்பின் வழி 2010-ல் மீண்டும் தாந்த்ரீகம் குறித்த சில விரிவான நூல்களை வாசிக்க நேர்ந்தது. அது இந்து மதம் குறித்த புதிய வெளிச்சங்களை எனக்குத் தந்தது. அதில் ஆர்வமாகி தாந்த்ரீகம் தொடர்பான நூல்களையும், தாந்த்ரீக சாஸ்த்திரங்களையும் தேடித்தேடி சேகரித்து வாசிப்பை விரிவும், ஆழமும் படுத்தினேன். மென்மேலும் தெரிய வந்துகொண்டேயிருந்த விஷயங்களும், அடுத்தடுத்து வெளிப்பட்டுக்கொண்டேயிருந்த தாந்த்ரீக மெய்ம்மைகளும் இந்து மதம் குறித்த பெரு வியப்புக்கு என்னை ஆளாக்கின. அடிப்படையில் நான் கடவுள் மறுப்பாளனான ஓர் ஆன்மீகவாதி. ஓஷோ வழி வந்த ஆன்மீக அறிவியலாளன். இந்து மதத்தின் ஆன்மீக, யோக வளமைகள் குறித்து ஏற்கனவே பல விஷயங்கள் தெரியுமென்றாலும், தெரியாத ஏராளமான பொக்கிஷச் செல்வங்கள் அதில் கொட்டிக்கிடக்கின்றன என்பது தாந்த்ரீக வாசிப்பின்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. அதிலும் இந்து மதம் அறிவியல் அடிப்படையிலானது என்பதை அப்போது அறிய நேர்ந்ததோடு, அறிவியல் மற்றும் யோக மெய்ம்மைகளே அதில் இறை வடிவங்களாகவும், புராணிகங்களாகவும் உருக்கொடுக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது. அவை அறிவியல் பார்வை கொண்ட கடவுள் மறுப்பாளனான என்னாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தன. அதைக் காட்டிலும் எனக்கு இன்னமும் ஆச்சரியப்பட்டுத் தீராத விஷயம் என்னவென்றால், ப்ரபஞ்சத் தோற்றவியல், ப்ரபஞ்ச மெய்ம்மை, பரிணாமக் கோட்பாடு, அணுக் கோட்பாடு போன்ற நவீன அறிவியல் கண்டறிவுகளையும், நவீன உளவியல் கண்டறிவுகளான ப்ரக்ஞைக் கோட்பாடு, பிளப்பு மூளைக் கோட்பாடு போன்றவற்றையும் நம் முன்னோர்களான ஞானியர்களும், யோகியர்களும் வேதகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட காலத்திலேயே கண்டறிந்து தாந்த்ரீகவியலில் வெளிப்படுத்தியிருக்கிறர்களே என்பதுதான். இந்து மதம் என்பது நவீன அறிவியல்படியான ப்ரபஞ்ச மெய்ம்மை அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த தாந்த்ரீக யோக அறிவியல் பேருண்மையாகும். அது இறையியல், ஆன்மீகம், யோகம், ப்ரம்மஞானம், மெய்யியல், அன்றாட வாழ்வியல் உள்ளிட்ட பல பிரிவுகளின் பல்வேறு அம்சங்களிலும் மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் மெய்ம்மைகளும் பேருண்மைகளும் மக்களுக்குத் தெரியாதபடி பல விதங்களிலும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. மக்கள் அறிந்து பயனுற வேண்டிய விஷயங்கள் அவை. ஆனால் அது அவர்களிடமிருந்து மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. அவை தாந்த்ரீக ரகசியங்கள், யோக ரகசியங்கள் என்ற பெயரில் துறைசார் ரகசியங்களாக (esoteric) காக்கப்பட்டுவருகின்றன. அவற்றில் சாமான்ய மக்களின் இயல்புக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பொருந்தாத, யோகியர்கள் மட்டுமே பயிலத்தக்க தீவிரமான ஆழ் நிலைக் கூறுகள் பலவும் உள்ளன என்பது வாஸ்த்தவம்தான். அது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால், மக்களின் ஆன்ம முன்னேற்றத்துக்கும், யோகவியல் பயன்பாட்டுக்கும், மெய்ஞானத்துக்கும் உரிய அடிப்படை விஷயங்களாவது சொல்லப்பட்டிருக்கவேண்டுமல்லவா? ஞானியர்களாலும், யோகியர்களாலும் படைக்கப்பட்ட வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், இதிகாசங்கள் போன்ற புனித நூல்களில் அவை சொல்லப்பட்டுமிருக்கின்றன. இந் நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கிய வகையான கவிதைக்கும், அதன் பாடுபொருளான மெய்யியலுக்கும் உரித்தான வகையில் குறியீடுகளாகவும், உருவகங்களாகவும் அவை கூறப்பட்டுள்ளன. இந்து மத கடவுள் உருவாக்கங்களும் கூட பன்முகப் பொருள் கொண்ட தாந்த்ரீகக் கருத்தாக்கங்களின் உருக்கொடுப்புகளே. எனவே, இவற்றின் மெய்ப்பொருள்களை அறிந்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது மதவியல் அறிஞர்களின் பணி. ஆனால், அவர்கள் அதைச் செய்வதில்லை. மத குருமார்கள், உபன்யாசகர்கள், மத அறிஞர்கள் போன்றவர்களில் பலருக்கும் இந்தக் குறியீடுகள், உருவகங்கள், உருக்கொடுப்புகள் (embodyment) ஆகியவற்றின் மெய்ப்பொருள் என்ன என்பதே தெரிவதில்லை. அவை குறியீடுகள், உருவகங்கள், உருக்கொடுப்புகள் என்பதே கூடத் தெரியாமல் அப்படியே நேர்ப்பொருள் கொண்டு வேத வாந்தியும், புராண வாந்தியும் எடுத்துவைக்கிறார்கள். ஒரு சிலருக்கு இவை அரைகுறையாகவோ, முழுதாகவோ தெரிய வந்தாலும் அவர்கள் ஏதோ சிலதை மட்டும் சொல்லிவிட்டு, முக்கியமானதையும் அவசியமானதையும் சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். எனவே, எனக்குத் தெரிய வந்த தாந்த்ரீக மெய்ம்மைகளையும், யோகப் பேருண்மைகளையும் மக்கள் அறிந்து பயனுறும்படி வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதைக் கட்டுரைகளாக எழுதவும், தொகுத்து நூலாகாவும் செய்யலாம். ஆனால், அது வெறும் தகவலாக மட்டும்தானே இருக்கும். அதற்கு பதிலாக ஓவியங்களாக ஆக்கினால் அது கலைப் படைப்பாகவும் ஆகுமே என்று பட்டது. அது மட்டுமின்றி ஓவியம் உலகப் பொது மொழி என்பதால் அவை உலக முழுமைக்கும் சென்றடைய வாய்ப்புள்ளதல்லவா! இப்படித்தான், இதற்காகத்தான் நான் நவீன தாந்த்ரீக ஓவியனாக ஆனேன்.