தாந்த்ரீகம் : மறைக்கப்பட்ட பேருண்மைகள் 3

சௌந்தர சுகன் இதழில் வெளியான ஓவியரின் நேர்காணலின் பகுதி 3
##### 10. தமிழ் ஓவிய மரபு என்று ஒன்று இருக்கிறதா? எனில் அதுபற்றி சான்றுகளுடன் கூறுங்கள், தமிழ் ஓவிய மரபு என்ற ஒரு குறிப்பிட்ட வகை இல்லை. ஆனால், தமிழகத்தில் சில ஓவிய பாணிகள் உள்ளன. தஞ்சாவூர் ஓவியம், நாயக்கர் கால சுவர் ஓவியங்கள், மராட்டியர் கால ஓவியங்கள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால், சித்தன்னவாசல் ஓவியங்களை இதில் சேர்க்க முடியாது. அது அஜந்தா – எல்லோரா பாணியைச் சேர்ந்தது. பெருந்தெய்வ மற்றும் சிறுதெய்வ ஆலயங்கள் - குறிப்பாக கிராம காவல் தெய்வங்கள்,, நாட்டார் குல தெய்வங்கள் உள்ளிட்ட திராவிட ஆலயங்கள் ஆகியவற்றில் உள்ள சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், செதுக்குச் சிற்பங்கள், சுதைகள், மற்றும் உருவாரங்கள் ஆகியவற்றையும் இதோடு சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஓவியக் கலை என்பது சிற்பக் கலையையும் உள்ளடக்கியதே! இவற்றை நாம் ஆயும்போது தமிழ் ஓவிய மரபு என்ற ஒன்றை அடையாளப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். அல்லது குறைந்தபட்சம் தமிழ் சிற்ப மரபு என்ற ஒன்றையாவது நிச்சயமாக நாம் வரையறுக்க இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் பாரம்பரியக் கலையானது ஓவியத்தைக் காட்டிலும் சிற்பவியலிலேயே அதிக கவனமும் சிறப்பும் கொண்டதாக இருக்கிறது. இதை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. செவ்வியல் சிற்ப மரபு, 2. நாட்டார் சிற்ப மரபு. இந்த இரண்டுமே தனிச் சிறப்புகள் மிக்கவை. செவ்வியல் சிற்ப மரபில் முக்கிய இடம் வகிப்பவை சோழர் கால சைவ ஆலயங்களும், சிற்பங்களும். இந்திய அளவிலான ஆலயக் கட்டுமானங்களில் முதன்மை பெறுபவை இவ்வாலயங்கள். அதே போல சோழர் கால செப்புச் சிலைகள் கலை மேன்மையில் உலகப் பிரசித்தி பெற்றவையாயிற்றே! நாட்டார் சிற்பங்கள், சுதைகள், உருவாரங்கள் ஆகியவை செவ்வியல் சிற்பக் கலை போன்ற சாஸ்த்திரக் கோட்பாட்டு அழகியல் கொண்டவையோ, அவ் வகைச் சிற்பிகளால் படைக்கப்படுபவையோ அல்ல. அந்தச் சிற்பங்களும் சுதைகளும் கிராமியச் சிற்பிகளால் உணர்வியல்படி படைக்கப்படுபவை. உருவாரங்கள் மட்பாண்டக் கைவினைஞர்களால் செய்யப்படுபவை. அவர்கள் அழகையல்ல, இறைமையின் ஆற்றலையே வெளிக்கொணர விரும்புகிறார்கள். எனவே இவற்றில் கச்சாவான மூலப் படைப்பாற்றல்கள் நிறைந்திருக்கக் காணலாம். மேற்கூறிய ஓவிய பாணிகள், செவ்வியல் மற்றும் நாட்டார் சிற்ப பாணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு புதிய கலை வடிவை உண்டாக்க முடியும். அப்படிச் செய்தால் அது நிச்சமாக தமிழ் ஓவிய – சிற்ப மரபுக்கு வழிவகுக்கும் என்பது எனது கருத்து. தமிழ் ஓவிய மரபு என்ற ஒன்றை அடையாளப்படுத்தவோ, உருவாக்க முடியுமா என்பது குறித்து இந்திரன் தனது, ‘நவீன ஓவியம் ; பார்வைப் படிமங்களும் பண்பாட்டுப் பயணங்களும்’ என்ற நூலில் விரிவாக விவாதித்துள்ளார். இத்தகைய கேள்விகளும் அக்கறைகளும் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் அது. அதில் கூறப்படும் வேறு வகையான கருத்துகளும் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. ##### 11. தமிழில் நவீன ஓவிய மரபை தமிழ் மண் சார்ந்து தந்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்... நவீன ஓவியக் கோட்பாடுகள் உலகப் பொதுத் தன்மையிலானவை என்பதால் நம் நாட்டில் மட்டுமன்றி மற்ற நாடுகளிலும் அதை அப்படியே தட்டையாகப் பின்பற்றுகிறவர்களே அதிகம். ஆனால், மேதைகள் என்ற பாராட்டைப் பெறத் தக்கவர்களில் பெரும்பாலானவர்களும் தத்தமது பிரதேச அடையாளங்களும் அதில் இடம் பெற வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர். இந்திய நவீன ஓவிய மேதைகள் பலரிடத்திலும் இது அதிகமாகவும் ஆழமாகவும் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழக நவீன ஓவியர்களிலும் இத்தகைய சிறப்புக்குரியவர்கள் உள்ளனர். ஆதிமூலத்தின் முந்தைய கட்ட கோட்டோவியங்களில் தமிழக நாட்டார் கலைக் கூறுகள் பலவும் அழுத்தமாகப் பதிவுற்றிருப்பதைக் காணலாம். கிராமப் புறங்களில் உள்ள கிராம தேவதை / நாட்டார் கோவில் சிற்பங்களின் வடிவங்களை மட்டுமன்றி, அவற்றின் மூலப் படைப்பாற்றலையும் தனது ஆளுமை மிக்க கோடுகளில் வசப்படுத்தியவர் அவர். அவரது உருவ வரைவுகளில் காணும் வளைவுகளற்ற, கம்பீரமும் ஆண்மையும் மிக்க நேர்கோட்டுத்தன்மை, அய்யனார் சிற்பங்களிலிருந்து பாரம்பரியச் சொத்தாக அவருக்கு வந்ததாகவே கருதுகிறேன். டி.ஆர்.பி.மூக்கையாவின் சிற்பங்கள் அசாத்தியமான மூலப் படைப்பாற்றல் கொண்டவை. அவரது ஜல்லிக்கட்டு சிற்பங்களில் தமிழ் மண்ணின் ஆயிரத்தாண்டு கால வீரப் பாரம்பரியமும் செறிந்துள்ளதை உணரலாம். எளிமைப்படுத்தலில் கலை தீவிர ஆற்றல் வெளிப்பாடு கொள்கிறது என்பதற்கும் அவை சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. கலை ஆர்வலர்கள் மூக்கையாவின் ஏதோ ஒரு சிற்பத்தைப் பார்த்தாலும் அவ்வளவு சுலபமாக அதை மறந்துவிட முடியாது. ராஜவேலு. சந்தானராஜ் ஆகியோரின் ஆற்றல் மிக்க கோட்டொவியங்கள் தமிழகத்தின் ஓவிய மரபுகளையும், தமிழர் வாழ்வியலையும் பதிவு செய்பவை. எம்.கே.முத்துச்சாமியின் கலவை ஊடக ஓவியங்களில் தமிழக நாட்டுப்புறக் கலைகளும், பி.பெருமாளின் ஓவியங்களில் தமிழக கிராம மக்களின் வாழ்வியலோடான நிலக் காட்சியும் இவ்வாறே பதிவுறுகின்றன. மற்ற தமிழக நவீன ஒவிய ஆளுமைகள் பலரிடமும் தமிழ் அடையாளங்களைக் காண முடியும் எனினும் இவர்களில் மண் சார்ந்த தன்மைகள் மேலோங்கியுள்ளன என்பதாலேயே இவர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். ##### 12. இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி வரையப்படும் கேரள சுவர் ஓவிய மரபு இன்னமும் அங்கே வழக்கத்தில் உள்ளதல்லவா? அது பற்றிச் சொல்லுங்கள்.

Image Courtesy : blogspot.com

சுவர் ஓவியங்கள் ஆயிரத்தாண்டு காலங்களாகவே உலகெங்கும் வழமையில் இருந்து வருகின்றன. பண்டைய வழக்கத்தில் அவை யாவும் இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டவைதாம். தொன்மை மிக்க எகிப்திய பிரமிட் மற்றும் அமெரிக்க மாயன் ஓவியங்கள், பிற்காலத்திய மேற்கு நாட்டுப் பேராலயங்களிலும் (cathedral), தேவாலயங்களிலும் (church) உள்ள சுற்றுச் சுவர் மற்றும் மேற்கூரை ஓவியங்கள் ஆகியவை இதற்கான பிரபல உதாரணங்கள். நம் நாட்டிலும் இது போலவே அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலுள்ள குகை ஓவியங்களும், ஆலயங்கள் மற்றும் அரண்மனைகளின் சுவர் ஓவியங்களும் அக் காலத்தில் இருந்தபடி இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சாயங்கள் மூலம் வரையப்பட்டன. பிந்தைய நூற்றாண்டுகளில் இதில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாக வேதிப் பொருள் கலப்புகளுடன் சாயங்கள் தயாரிக்கப்படுவது நடைமுறைக்கு வந்ததும் பண்டைய இயற்கைச் சாயப் பயன்பாடு பொதுவாக வழக்கொழிந்துபோயிற்று. எனினும் டெம்ப்பரா (tempera) சாயத்தைப் பண்டைய முறையில் முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்து வரைகிற நுண்கலை ஓவியர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். சுவர் ஓவியங்கள் மட்டுமின்றி, கித்தான்களிலும் இவ் வகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. கேரள சுவர் ஓவிய மரபிலும் இவ்வாறே இயற்கைப் பொருட்களில் சாயங்கள் தயாரிக்கப்பட்டன. பிற்காலத்தில் வேதிப் பொருள் கலப்பிலான சாயங்கள் வந்த பிறகும் இம் மரபு வழிப்பட்ட சுவர் ஓவியர்கள் பண்டைய இயற்கை வழமையையே தொடர்ந்தனர் என்பது தனிச் சிறப்பு. இதற்கான சாயங்கள் சில வகைக் கற்கள், தாதுப் பொருட்கள்,, தாவரங்கள், குங்குமம், சுண்ணாம்பு, விளக்குக் கரி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. வண்ணங்கள் மரக் கிண்ணங்களிலோ, கொட்டாங்கச்சியிலோ கலக்கப்படும். ஒட்டும் தன்மைக்காக சாயத்துடன் வேப்பம் பிசின் சேர்த்து இளநீரில் கரைப்பார்கள். ஆற்றுப் படுகையில் வளரும் ‘எய்யம் புல்’ என்கிற ஒரு வகைப் புல்லிலும், மர வேர்களிலுமே தூரிகைகள் செய்யப்படுகின்றன.. கூர் செய்யப்பட்ட மூங்கில் துணுக்கில் ஓவியங்களுக்கான புறக்கோடுகள் வரையப்படும். வரை தளமான சுவரும் இவ்வாறே உரிய முறையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பக்குவப்படுத்தப்படும். இந்தச் சுவர் ஓவிய மரபு சில்பரத்னா என்னும் ஓவிய – சிற்ப சாஸ்த்திரத்தின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் மனித / கடவுள் உருவ அமைப்புகள், அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியவை கதகளி, கூடியாட்டம் ஆகிய மரபு நடனங்களிலிருந்து கடன் பெறப்பட்டவையாகும். இக் கலை, கி.பி. 9 – 12 நூற்றாண்டுகளில் உருவானது. திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில், ஏற்றமானூர் மகாதேவன் ஆலயம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பல ஆலயங்களில் இவ் வகைச் சுவரோவியங்கள் உள்ளன. இயற்கைப் பொருட்களினால் மட்டுமே செய்யப்படும் இம் மரபு ஓவியம், இதே போல இயற்கைப் பொருட்களின் வண்ணப் பொடிகளினால் தரையில் வரையப்படுகிற, சாக்த வழிபாட்டைச் சேர்ந்த ‘களமெழுத்து’ என்னும் தொல் த்ராவிட தாந்த்ரீகச் சடங்கிலிருந்து உருவானதாகும். களமெழுத்திலும் இவ்வாறே இன்னமும் இயற்கைப் பொருட்களின் வண்ணப் பொடிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. புதிய தலைமுறை ஓவியர்கள் காலடி என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ சங்கரா சமஸ்க்ருதக் கல்லூரியிலும், குருவாயூர் ஆலயத்தோடு தொடர்புள்ள சுவர் ஓவியப் பள்ளியிலும் இந்த மரபு வகைச் சுவர் ஓவியம் கற்கலாம். இவர்கள் மூலமாக கேரள ஆலயங்கள் பலவற்றிலும் இவ் வகை ஓவியங்கள் வரையப்படுவது வழமையாகியுள்ளது. தற்போது சுவர்களில் மட்டுமன்றி கித்தான், காகிதம், கார்ட்போர்ட் போன்றவற்றிலும் இவை வரையப்படுகின்றன. அதே போல முற்காலத்தில் ஆலயங்கள் மற்றும் அரண்மனைகளில் மட்டுமே வரையப்பட்ட அது இன்று பொது மக்களின் புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இவ்வோவியங்களின் கவர்ச்சிகரமான அழகியல் சிறப்பம்சங்களாலும், மரபுச் சிறப்பாலும் கலை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாகி, தற்போது இது தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் கூட பரவியுள்ளது. செல்வந்தர்களின் வீடுகளிலும், ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரென்ட்டுகள், நிறுவன அலுவலகங்கள் போன்ற பொது இடங்களிலும் கேரள சுவர் ஓவியர்களைத் தருவித்து இவ் வகை ஓவியங்களால் சுவர்களை அலங்கரிப்பது நாகரீகமாகியுள்ளது. இத்தகைய இடங்களில் இயற்கைச் சாயங்களுக்கு பதிலாக அக்ரிலிக் சாயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ##### 13. சுவர் ஓவியங்களுக்கென்று இந்தியக் கோவில்களைச் சார்ந்து ஓர் உன்னத இடம் இருந்தது, மற்ற பல மாநிலங்களிலும் இன்று அது பொலிவிழந்து நிற்கிறதே ஏன்? முழுக்கவும் அப்படிச் சொல்ல முடியாது. ஒரு புறம் அந்த வழக்கம் தொடர்ந்துகொண்டும் இருக்கிறது, மறு புறம் நாசப்படுத்துதல்கள் நடந்துகொண்டுமிருக்கின்றன. புதிதாகக் கட்டப்படும் சிற்சில ஆலயங்களில் மரபு வழியிலோ, அல்லாமலோ சுவர் ஓவியங்கள் பண்டைய வழக்கப்படியே புராணச் சித்தரிப்புகளோடு தீட்டப்படுவதுண்டு.. பழம் பெருமை வாய்ந்த சுவர் ஓவியங்கள் உள்ள பழைய ஆலயங்கள் புனரமைக்கப்படுகையில் அவ்வோவியங்களைச் சிதைக்காமல் அவற்றின் மேல் படிந்துள்ள அழுக்குகள், கறைகள், பூஞ்சைப் படிவுகள் போன்றவற்றை மட்டும் நீக்கும் செயல்கள் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இது பாராட்டுக்குரியது. ஆனால், சில ஆலயங்களில் சிதைவுக்குள்ளான பழைய ஓவியங்களைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் அவற்றின் மீதே வரைந்து அவற்றின் பழம் பெருமைக்குப் பங்கம் விளைவித்துவிடுகிறார்கள். சில இடங்களில் இதைக் காட்டிலும் கொடுமையாக அவற்றின் மீது சுண்ணாம்போ, டிஸ்டெம்பரோ பூசி மறைத்துவிடுகிறார்கள். அதே போல பல நூற்றாண்டுப் பழமை வாய்ந்த, பிரசித்திபெற்றதும் பெறாததுமான பல ஆலயங்களில் இத்தகைய சுவர் ஓவியங்களுக்கு உரிய பாதுகாப்போ, பராமரிப்போ கிடையாது. எனவே, அங்குள்ள ஓவியங்கள் பக்தர் தரப்பில் உள்ள விஷமிகளால் பெயர்கள் செதுக்கிச் சிதைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புராதனக் கலைப் பெருமைகளை மக்கள் உணராதிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். அதோடு, ஆலய நிர்வாகம் அல்லது அற நிலையத்துறை இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் மிக அவசியம். மற்றபடி பழைய காலம் போன்ற உன்னத இடம் பெறுவது என்பது நடவாது. காரணம், அப்போதிருந்த ஆட்சி முறைகளும், நடைமுறைகளும் வேறு; இப்போதுள்ளவை வேறு. எனவே இப்போது மிச்சமுள்ள பழம் பெருமைகளை அழிக்காமல், மேலும் சிதைக்காமல் காக்க முடிந்தால் அதுவே பெரிய காரியம். ##### 14. இயற்கையிலிருந்து சாயங்களைத் தயாரித்து பாறைகளில், குகைளில் வரைந்த சித்தன்னவாசல் ஓவிய முறை இன்றைக்கு சாத்தியமா? சாத்தியமே! கேரள சுவர் ஓவிய மரபு வகையில் இன்னமும் பண்டைய முறை பின்பற்றப்படுவது போல சித்தன்னவாசல் ஓவிய முறைகளையும் பின்பற்றலாம். தற்காலத்தில் ஓவியத்துக்குப் பயன்படுத்தப்படுகிற பல வகைச் சாயங்களும், பல் வகை ஊடகங்களும் கூட பெரும்பாலும் இயற்கைப் பொருட்களால் ஆனவையே. அவற்றின் தயாரிப்பு முறைகளில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பதுதான் வித்தியாசம். ##### 15. ஓர் ஓவியத்தை உங்கள் பார்வையில் எப்படி இரசிக்க வேண்டும் என்று சொல்வீர்கள்? ஒவ்வொரு கலைக்கும் அதற்கான இலக்கணங்கள், தொழில் நுட்பங்கள், அழகியல் கூறுகள் போன்ற பல அடிப்படை அம்சங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக அறிந்து, நுணுக்கமாக அனுபவித்தாலே அதில் அதிகபட்ச கலை அனுபவம் சாத்தியமாகும். எனினும், இந்த இலக்கணங்களையோ, தொழில் நுட்பம் உள்ளிட்ட அழகியல் கூறுகளையோ பற்றி அறியாதவர்களும் கலையைத் தம் உணர்வு அளவில் ரசிக்கவும், அனுபவிக்கவும் முடியும். உதாரணமாக, இசை பற்றி எதுவும் தெரியாதவர்கள், அன்னிய மொழிப் பாடல்களையும் ரசித்து லயிக்க முடிகிறதல்லவா! இசையின் இலக்கணங்கள், அதன் அழகியல் நுட்பங்கள், பாடலின் தெரியாத மொழி, அதனால் புரியாத பொருள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அந்த இசை ஏற்படுத்துகிற உணர்வு என்பதே முதன்மையானது, முக்கியமானது. ஓவியத்திலும் அது போலத்தான். ஓவியம், (பாடலற்ற) இசை, நடனம் ஆகியவை உலகப் பொது மொழிகள் என்று சொல்லப்படும். அவை எந்த நாட்டினுடையதாக இருந்தாலும், பிரதேசம், மொழி, இனம், கலாச்சாரம் போன்ற புற பேதங்கள் அனைத்தையும் கடந்து உலகின் எந்த மூலையிலும் உள்ள ரசிகரால் அனுபவிக்கத் தக்கதாகவே இருக்கும். அதற்கான அடிப்படைத் தேவை ரசனையுணர்வு மட்டுமே! மேலும், ஓவியத்தைப் பொறுத்த வரை - அதுவும் குறியீடு, உருவகம், பன்முகத்தன்மை, புதிர்மை போன்ற பயன்பாடுகள் உள்ள பட்சத்தில் - அதன் அர்த்தப்படுத்தல்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பல சமயங்களில் படைப்பாளி அர்த்தப்படுத்தியிராத அர்த்தங்கள் கூட ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் கிடைக்கும். எனவே, இப்படித்தான் ரசிக்கவேண்டும் என எப்படிச் சொல்ல முடியும்? இப்படியும் ரசிக்கலாம் என்று மட்டுமே சொல்ல முடியும். ஓவிய இலக்கணங்கள், அழகியல் கூறுகள் ஆகியவற்றை அறிந்திருப்பதலேயே ஒரு ஓவியத்தை முழுமையாக ரசிக்கவோ, அனுபவிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியும் என்றும் சொல்வதற்கில்லை. அந்த ஓவியத்தின் உள்ளடக்கம், கருப்பொருள் ஆகியவை சார்ந்த விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக, தாந்த்ரீகம் பற்றித் தெரியாமல் வெறும் இலக்கணத்தையும், அழகியலையும் வைத்துக்கொண்டு எனதோ, மற்ற தாந்த்ரீக ஓவியர்களுடையதோ ஓவியங்களைப் புரிந்துகொள்ள முடியாது. சிலரது ஓவியங்களில் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள், உடல் மற்றும் மன நிலைகள், வாழ்க்கை ஆகியனவும் மறைமுகமாகக் கலந்திருக்கும். அவை மிக முக்கிய அங்கமும் வகிக்கக்கூடும். அத்தகைய சூழலில் அதைப் பற்றியும் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகிவிடும். வான்கோவின் உன்மத்தம், நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சிக் கொந்தளிப்பான வாழ்வு, மனச் சிதைவு, அதன் விளைவான தற்கொலை ஆகியவற்றை அறிந்திருந்தால் மட்டுமே அவனது ஓவியங்கள் ஏன் அவ்வளவு உணர்ச்சிமயமாக இருக்கின்றன என்பதையும், அவனது ப்ரத்யேக முத்திரையான சுழல் தீற்றல்கள் எப்படி ஏற்பட்டன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இப்படி இன்னும் அனேக விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவை கூடுதல் ரசிப்புக்கானவை. அடிப்படைத் தேவைகள் ரசனையுணர்வும், குறைந்தபட்ச இலக்கண அறிவும்தான். ##### 16. சிறுகதை, கவிதை, நாவல் போன்ற புற படைப்புகளுக்கு ஒரு பக்க வாத்தியமாக இதழியல் துறையில் ஓவியத்தைக் கையாளும் பழக்கத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அது இதழியல் சார்ந்த தேவை; அவ்வளவுதான்! அவை விளக்கச் சித்திரங்கள் (illustrations) அல்லது அலங்கரிப்புச் சித்திரங்கள். இதழியலில் இதே போல கருத்துப் படங்கள் (cartoons) இடம் பெறுகின்றன. விளம்பரங்களிலும் அதற்கேற்ற ஓவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு துறைகளில் அததற்குத் தக்க ஓவியங்கள் பயன்படுத்தப்படுவதும், அதற்கென அந்தந்தத் துறை ஓவியர்கள் இருப்பதும் இயல்புதானே! ஒருவேளை நீங்கள் நுண்கலை ஓவியங்களை இலக்கிய இதழ்களிலும், நூல்களிலும் பயன்படுத்துவது பற்றிக் கேட்கிறீர்கள் எனில், அது ஆரோக்கியமானதும் வரவேற்கத் தக்கதுமே! அதன் மூலம் அவ்வோவியங்கள் வாசகர்களைச் சென்றடைகின்றன அல்லவா! ##### 17. இந்திய ஓவியர்களில் நீங்கள் மதிக்கும் ஓவியர்கள் யார் யார்? ஏன்?

Image Courtesy : pinterest.com

எம்.எஃப்.ஹுஸேன், எஃப்.என்.சௌஸா, ஜோகன் சௌதுரி ஆகிய முன்னோடிகள் மூவரும், சமகாலத்தவர்களில் பரேஷ் மெய்த்தியும் நான் மிக மதிக்கிற இந்திய ஓவியர்கள் என்பது மட்டுமன்றி எனக்கு மிகப் பிடித்தமானவர்களும் கூட. இவர்களின் கலைத் தரம், அழகியல் கூறுகள், ஆளுமை மற்றும் தனித்தன்மைகள் நவீன இந்திய ஓவியத்துக்கு இவர்களின் பங்களிப்பு, தமது கலை வாயிலாக இவர்கள் சமூகம் அல்லது மக்களுக்குச் செய்ததும், வெளிப்படுத்தியதுமான காரியங்கள் போன்றவற்றை விமர்சன ரீதியில் மதிப்பிட்டே இவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். பிடித்தமானவர்களாக இருப்பதற்கும் அதுவே முதன்மையான காரணம், இரண்டாவது காரணம் அவர்களின் பாணிகள் எனக்கு உவப்பானவையாகவும், நெருக்கமானவையாகவும், பின்பற்றத் தக்கவையாகவும் உள்ளன என்பது. மேற்கூறப்பட்டவர்கள் எனது பட்டியலில் முதல் தரவரிசை(grade)யைப் பெறுபவர்கள். இரண்டாம் தரவரிசையைப் பெறுபவர்களின் விபரம் பின்வருமாறு: 1. உருவ ஓவியர்கள் : த்யேப் மேத்தா, பூபேன் கக்கர், அர்ப்பிதா சிங், அஞ்சலி இலா மேனோன், ஜத்தின் தாஸ். 2. பொழிப்பு (abstract) ஓவியர்கள் : ராம்குமார், ஆதிமூலம் 3. நவீன தாந்த்ரீக ஓவிய முன்னோடிகள் : எஸ்.ஹெச்.ரஸா, ஜி.ஆர்.சந்தோஷ், ஜே.முகம்மது அலி, கே.ஸி.எஸ்.பணிக்கர், கே.வி.ஹரிதாஸன். இவர்கள் என் மதிப்புக்குரியவர்களாகவும் பிடித்தமானவர்களாகவும் இருப்பதற்குக் காரணமும் மேற்சொல்லப்பட்டதே! ##### 18. தமிழகத்து நவீன ஓவியர்களைப் பற்றி கூறுங்கள்... பொதுவாக அனைவரையும் பற்றிச் சொல்வதெனில் நீண்ட கட்டுரை அல்லது நூல் எழுத வேண்டியிருக்கும். எனவே ஓர் ஓவியன் என்ற நிலையில் எனக்குப் பிடித்தமானவர்கள், உடன்பாடானவர்கள் பற்றி மட்டும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். தமிழக நவீன ஓவியர்களில் எனக்கு மிகப் பிடித்தமானவர் ஆதிமூலம். அவரது வல்லாளுமை மிக்க கோட்டோவியங்களுக்கும், இசை மயமான வர்ணத் தொகுப்பு (color composition) ஓவியங்களுக்கும் நான் ரசிகன். அடுத்ததாக என்னைக் கவர்பவர் ஆர்.பி.பாஸ்கரன். உறுதிப்பாடும் தன்னம்பிக்கையும் மிக்க கோடுகள், எளிமையின் வசீகரம் கொண்ட வரைகலைகள், பளிச்சிடும் வர்ணப் பயன்பாடுகள் ஆகியவை அவரது சிறப்பம்சங்கள். சிரமமே படாமல் வெகு அனாயாசமாக ஓவியத்தை வரைந்து உயிரும் உணர்ச்சியும் ஊட்டிவிடக்கூடிய வித்தகர் அவர். முன்னோடி நவீன தாந்த்ரீக ஓவியர்களான கே.ஸி.எஸ்.பணிக்கர், கே.வி.ஹரிதாஸன் ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் அவர்களின் இயக்கம் தமிழகம் சார்ந்தே பெரிதும் இருப்பதால் அவர்களைத் தமிழக ஓவியர்கள் என்றே கணக்கிடவேண்டும். அப்படியே கணக்கிடவும் படுகிறார்கள். நவீன தாந்த்ரீக ஓவியத்தில் இவர்கள் எனக்கும் முன்னோடிகள். இவர்களது படைப்புகளில் எனக்குப் பிடித்தமானது, உடன்பாடற்றது என இரு வகைகளுமே உண்டு. மற்றபடி, நான் மதிக்கிற தமிழக நவீன முன்னோடி ஓவியர்கள் / சிற்பிகள் என நிறையப் பேர் இருக்கிறார்கள். அல்போன்ஸோ, எம்.கே.முத்துசாமி, எம்.சேனாதிபதி, வித்யாஷங்கர் ஸ்தபதி, டி.ஆர்.பி.மூக்கையா, கே.எம்.கோபால், தட்சிணாமூர்த்தி, ஏ.பி.சந்தானராஜ், ஆர்.ராஜவேலு ஆகியோர் அப் பட்டியலில் இடம் பெறுவர். இதில் ஓரிரு பெயர்கள் விடுபட்டிருக்கலாம். எனக்கு உடன்பாடில்லாததும், பிடிக்காததும், எனது விமர்சனப் பார்வையில் உயர் மதிப்பு பெறாததுமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைச் செய்கிற பல முன்னோடிகளும் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை கவனத்தோடே இங்கு தவிர்த்திருக்கிறேன். ##### 19. உலகில் ஓவியங்களை அதிகம் மதிக்கும் நாடு எது? மக்கள் யார்? ஃப்ரான்ஸ்! அதன் தலை நகரான பாரிஸ் கலைஞர்களின் சொர்க்கம் என்று போற்றப்படுகிறது. ஓவியத்துக்கு மட்டுமல்ல; மற்ற அனைத்து நுண்கலைகளுக்குமே அதுதான் தலைவாசல். அதனால்தான் மற்ற உலக நாடுகளில் உள்ள கலை – இலக்கியவாதிகள் பலரும் பாரீஸில் குடியேற விரும்புகிறார்கள்: கனவு கண்கிறார்கள். ஃப்ரான்ஸ்ஸில், பாரிஸை மையமாகக் கொண்டே நவீன கலை – இலக்கிய இயக்கங்களில் பெரும்பாலானவையும் தோன்றி வளர்ந்தன. அதற்கும் முன்பிருந்தே அதுதான் கலைகளின் சொர்க்க பூமியாக இருந்திருக்கிறது. இப்போதும் அவ்வாறே இருந்துவருகிறது. மேலும் அது நவீன நாகரீகத்தின் தாயகமும் கூட என்பது பரவலாகத் தெரிந்ததுதானே! இது புற ரீதியானது. மற்றபடி அக ரீதியாக ஓவியங்களை மதிக்கும் மக்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஓவியங்களுக்குக் கிடைக்கும் விலை என்பது அதன் சந்தை மதிப்பு மட்டுமே! வாங்கும் திறனுள்ளவர்கள் மட்டுமே அதை வாங்க முடியும். ஆனால், ஓவியத்தின் மதிப்பு என்பது அதன் விலையில் அல்லவே! அப்படிப் பார்க்கையில் ஓவியங்களை மிக உயர்வாக மதிக்கும் மக்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கிறார்கள். நம் நாட்டில் அது சற்று கூடுதலாகவே இருக்கும். இது விமர்சன ரீதியிலானதல்ல. நான் சொல்வது கலை பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாத, கல்வி அறிவு குறைந்த அல்லது அறவே இல்லாத சாமான்ய மக்களைப் பற்றி. எனது அனுபவத்திலேயே அப்படிப் பலரைப் பார்த்திருக்கிறேன். எனது பல்வேறு ஓவியங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் சொன்ன கருத்துகள், அவர்களிடம் நாம் எதிர்பார்க்காத விதத்தில் இருந்தன என்பதோடு, ஓவியம் என்னும் கலையை அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதையும் உணர்த்தியிருக்கின்றன. அவர்கள் அதை ஒரு தொழிலாகப் பார்ப்பதில்லை; மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய அருள் என்று மதிக்கிறார்கள். பல வெளியூர்களில் புதிதாக அறிமுகமாகும் மக்களிடம் ஓவியன் என அறிமுகப்படுத்தியதுமே, என்ன வரைகிறோம் என்பது கூட தெரியாமல், அவர்கள் உடனடியாக அதைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதைவிடப் பெரிய மதிப்பை எந்த விமர்சனமும், எந்த விலையும் கொடுத்துவிட முடியாது அல்லவா? ##### 20. நவீன ஓவியங்களை ஓரளவுக்காவது மகிமைப்படுத்தியவை சிற்றிதழ்கள்தாம். அத்தகைய சிற்றிதழ்களைப் பற்றிக் கூறுங்கள். நவீன ஓவியத்துக்கும் சிற்றிதழ்களுக்குமான தொடர்பு பற்றி இந்த நேர்காணலின் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே சொல்லியிருக்கிறேன். மற்றபடி இலக்கியம், பிற கலைகள், சமூகவியல், அரசியல் போன்றவற்றில் வெகு மக்கள் இதழ்களுக்கு மாறான, ஆழமானதும் காத்திரமானதுமான போக்குகள் கொண்டவை சிற்றிதழ்கள் என்பதும் இத் தரப்பை அறிந்தவர்களுக்குத் தெரிந்ததுதான். வெகு மக்கள் இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்குமான வேறுபாடுகள், சிற்றிதழ்களின் தன்மைகள், சிற்றிதழாளர்களின் குணங்களும் சிற்றிதழ்களின் போக்குகளும் என்பவை குறித்தெல்லாம் பேசப் புகுந்தால் அது நீண்டுகொண்டே போகும். அது இப்போது நமக்குத் தேவையற்றதும் கூட. ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். சிற்றிதழ் நடத்துவது என்பது ஒரு தொழில் அல்ல. அது ஓர் இயக்கம். எனவே சமரசம் செய்து கொள்ளாத சிற்றிதழ்கள் நஷ்டங்களையும், சிரமங்களையும் பட்டே ஆகவேண்டும். அதில் இயங்கும் படைப்பாளிகளுக்கும் இதே கதிதான்! சிற்றிதழ் ஆசிரியர்களும், படைப்பாளிகளும் தமது பொருளாதாரம், குடும்ப நலம், சமூக மதிப்பு உள்ளிட்ட பலவற்றையும் இழந்தே தமது கடமைகளைச் செய்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், தமது சமூகப் பொறுப்பை நிறைவேண்டும் என்பதையே லட்சியமாகக் கொள்ளும்போது இத்தகைய இழப்புகள் நேர்வது இயல்பானது. ஆனால், இதில் புத்திசாலித்தனமாக இருப்பவர்கள் பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல; பெரும் லாபங்களையும், மதிப்பையும் கூட அடைந்துவிடுகிறார்கள். யாரும் நம்மை நிர்பந்திக்கவில்லை; நமது சிலுவைகளை நாமேதான் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். எனவே, நமது சிலுவைப்பாடுகளில் கலங்காதிருப்போம். ‘ஏலீ, ஏலீ,... லாமா சபக்தானி?’ என்று புலம்பாதிருப்போம். நாம் சிலுவையை விரும்பி ஏற்றுக்கொண்டோம் என்கிறபட்சத்தில், உடலெங்கும் ரத்த விளாறுகளுடன், தலையில் முள் க்ரீடத்துடன், நெஞ்சில் நம் சிலுவையோடு நமது கொல்கொதாவை நோக்கி வீறுநடை போடுவோம்! ##### 21. நவீன ஓவியத்திற்கென்று ஓர் இதழ் வந்தால் நன்றாக இருக்கும். அது சாத்தியமா? அதற்கான சூழல், ஆட்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா? எனக்கும் வெகு காலமாக அந்த ஆசை இருக்கிறது. அதற்குத் தக்க ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு மிகுந்த செலவு பிடிக்கும். பல வண்ணத்தில், உயர் தரமான தாள் மற்றும் அச்சாக்கத்தில் வெளிவந்தால் மட்டுமே ஓவியம் அல்லது நவீன ஓவியத்துக்கான நூல்களோ, இதழ்களோ சிறப்பாக இருக்கும். தனி இதழ் விலை குறைந்தது நூறு – நூற்றைம்பதாவது ஆகும். தமிழில் இது வரவேற்புப் பெறாது என்பதால் இந்த எண்ணம் நிறைவேறுவது சாத்தியமில்லை. பதிலாக, இணைய இதழ் வேண்டுமானால் நடத்தலாம். அதற்கு ஏற்கனவே இத் துறையில் அனுபவமும், ஓவியர்கள், விமர்சகர்கள் மற்றும் கட்டுரையாளர்களுடன் பழக்கமும் உள்ள ஆசிரியர் குழு தேவை. பலன் கருதாது நேரத்தை, நாட்களை அதில் விரயமாக்கவும் நேரிடும். அதற்கும் தயாராக வேண்டுமே...!