தாந்த்ரீகம் : மறைக்கப்பட்ட பேருண்மைகள் 1

சௌந்தர சுகன் இதழில் வெளியான ஓவியரின் நேர்காணலின் பகுதி 1
நேர்கண்டவர் : சுகன்
(தஞ்சையிலிருந்து வெளிவரும் இலக்கியச் சிற்றிதழான ‘சௌந்தர சுகன்’ மாத இதழில் 2014 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இதழ்களில் ஐந்து பாகங்களாக தொடர்ந்து வெளியான, விரிவும் ஆழமும் கொண்ட நேர்காணல் இது. மின்னஞ்சல் வாயிலாக நேர்கண்டவர் அவ்விதழின் ஆசிரியர் சுகன். சௌந்தர சுகன் இதழோடு தொண்ணூறுகள் முதலான தொடர்பு ஷாராஜுக்கு இருக்கிறது. ஆசிரியர் சுகனுடன் நெருங்கிய நட்பும் கொண்டவர் அவர். இந்த அடிப்படைகளில் ஷாராஜைப் பற்றியும் சௌந்தர சுகன் இதழில் வெளியான அவரது நவீன ஓவியங்கள் மற்றும் இலக்கியப் பங்களிப்புகள் பற்றியும் சுகன் அவர்கள் எழுதிய ஒரு நினைவுகூர்தல் முன்னுரையும் இந்த நேர்காணலுடன் வெளியானது. அம் முன்னுரையின் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. நேர்காணலுடன் பேசுபொருள்கள் தொடர்பாக இந்திய மற்றும் உலக ஓவிய வரலாற்றின் மரபு மற்றும் நவீன ஓவியங்களையும், இந்தியக் கோவில்களில் இடம் பெறும் தாந்த்ரீகம் தொடர்பான சிற்பங்கள், சுதைகள் மற்றும் சுவர் ஓவியங்கள் ஆகியவற்றின் படங்களையும் தக்கபடி சிறப்பாக வெளியிட்டிருந்தார் சுகன். அவை இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன. விசாரம் கொண்ட வாசகர்கள் இணைய தளத் தேடல்களில் அது போன்ற ஏராளமான ஓவிய – சிற்பப் படைப்புகளைக் கண்டடைய முடியும். சௌந்தர சுகன் இதழ் மற்றும் அதன் ஆசிரியர் சுகன் அவர்களுக்கு நன்றியோடு இந்த நேர்காணல் இங்கே மீள் பதிவு செய்யப்படுகிறது). *** ##### சுகனின் முன்னுரையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் 1996 ஆம் ஆண்டின் ஒரு நாள்... முற்பகல்... வழக்கம் போல ‘தஞ்சை ப்ரகாஷ்’ கடையில் நான் நுழைந்தபோது வழக்கம் போல அவரது நாற்காலியில் அவர் இல்லை. அங்கிருந்த ஸ்டூலில் ஒரு பையன் உட்கார்ந்திருந்தார். ‘பங்க்’ என்று சொல்லப்பட்ட பாணியில் தலைமுடி வளர்த்து, ஜீன்ஸ் போட்டு, ‘விடலைத் திமிர்’ நுரைக்க நுரைக்க கிண்டலும் கேலியுமாய் இருந்தார் அந்தப் பையன். அன்றைக்கு பிரபலமாய் இருந்த திரைப்பட நடிகர் அரவிந்தசாமி அப்போது வைத்திருந்த தலைமுடி அமைப்பை ‘பங்க்’ என்பார்கள். அவருக்கு எதிர் திசையில் போய் அமர்ந்த என்னைப் பார்த்தார் அந்தப் பையன். நான் அந்தப் பையனின் ஸ்டைலை இரசித்தபடி பார்த்தேன். உள் கதவைத் திறந்தபடி வந்த ப்ரகாஷ், ‘வாங்க,... வாங்க சுகன்...! இவர்...’ என்று அந்தப் பையன் பக்கம் திரும்புவதற்குள் அந்தப் பையன் எழுந்து, ’நீங்கதான் சுகனா...? உங்க இதழ நான் ரொம்ப நாளா வாசிச்சுட்டு வர்றேன். உங்கள எல்லாம் பாக்கணும்னுதான் தஞ்சாவூருக்கு வந்தேன். நீங்களே வந்துட்டீங்க... நல்லதாப் போச்சு...’ என்று ஒரு வித சன்னமான குரலில் பேசியபடியும், புன்னகையை முகம் முழுக்க கொப்பளித்தபடியும் கை கொடுக்க, நானும் அவசரமாய் கைகளைக் கொடுத்தபடி ப்ரகாஷைப் பார்த்தேன். ப்ரகாஷ் அவருக்கே உரிய பூரண மந்திரப் புன்னகையுடன் தனக்கு முன்பிருந்த மேசையில் தாளம் போட்டபடி தலையை ஆட்டி, அவரது பாவனை மிளிரும் புருவங்களை வளைத்தபடியே, ‘ஷாராஜ்’ என்று இதழ் திறக்க, கைகளை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டேன். ‘ஷாராஜ்,... கேரளாவிலிருந்து...’ என்று வாய்விட்டு சொல்லியபடியே கைகளைக் குலுக்கினேன். அன்று தொடங்கிய நட்பு இன்றளவும் தொடர்கிறது. அவரது பன்முகப் படைப்பாற்றலையும், அந்தப் படைப்பாற்றலின் உள்ளிருக்கும் கலைஞன் ஷாராஜின் நுண் உணர்வையும், நவீன வாழ்வின் கூறுகளையும் தன் படைப்புக்குள் பிரச்சார நெடியில்லாமல் அழகுணர்வுடன் காட்டக்கூடிய அம்சத்தையும் தொடர்ந்து கவனித்தும் இரசித்தும் வந்துகொண்டிருப்பவன் நான். அடுத்த நாள் அவரை வீட்டுக்கு அழைத்திருந்தேன், மதிய உணவிற்காக. வந்து சாப்பிட்டார். பின் சுகன் அச்சகத்தில் அமர்ந்து பேசினோம்,... பேசினோம்,... பேசிக்கொண்டே இருந்தோம். அந்தப் பேச்சின் ஊடே, 'சுகன் இதழின் பெயரை நான் எழுதித் தரவா? ' என்று கேட்டார். 'அவசியம் தாங்க ஷாராஜ்! இந்தியன் இங்க், தூரிகை வேண்டுமா,... வச்சிருக்கேன்...' என்றேன். 'அதெல்லாம் வேண்டாம் சுகன். நல்லா எழுதற கருப்பு மை பேனா இருந்தாப் போதும்' என்றார். உடனே கொடுத்தேன். மிக அழகாக பல்வேறு வடிவங்களில் எழுதிக் கொடுத்தார். இன்று போல சில நிமிடங்களில் உடனே ஸ்கேன் எடுத்து அட்டையில் போட்டுவிட முடியாது. அப்போது சுகன் அச்சகம் கணிப்பொறி அச்சகமல்ல. 'லெட்டர் பிரஸ்' என்னும் பழைய முறையில் இருந்தது. நானே ஈயத்தால் ஆன எழுத்துகளை ஒவ்வொன்றாக கோர்த்து பக்கங்களை உருவாக்குவேன். பிறகு அவற்றை செஸ்சில் முடுக்கி, 'டிரிடில் மிசினில்' நானே அச்சடித்து, கட்டமைப்பு செய்து, சுகன் இதழைக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். பல பட்டங்கள் வாங்கியிருந்தும், அரசு வேலை தயாராக இருந்தும் போகாமல், சுகன் இதழைக் கொண்டுவர வேண்டும் என்கிற ஒரே நோக்கில் அயராது உழைத்த காலமது. இதழைக் கொண்டுவர மிகப் பெரிய உடல் உழைப்பை வியர்வை பொங்கப் பொங்க நான் தருவதைப் பார்த்து என் அம்மா புழுங்கிப் புழுங்கி கண்ணீர் விட்டு அழுத காலமது. இப்படிக் கஷ்டப்படுவதற்கா இவ்வளவு செல்லமாய் வளர்த்தேன் என்று புலம்பித் திரிந்த காலமது. ஷாராஜ் எழுதிக் கொடுத்தவைகளை 'பிளாக்குகள்' செய்து வாங்கி பயன்படுத்தினேன். பல ஆண்டுகள் அவர் எழுதிக் கொடுத்த அந்தப் பெயர் வடிவத்தில்தான் சுகன் வந்தது. அதோடு சில கவிதைகளையும் கொடுத்தார் ஷாராஜ். அவரது கவிதைகள் 01-04-1996 சுகன் இதழில் வந்தது. ஊருக்குப் போய் அவர் அனுப்பி வைத்த ஓவியம் 01-06-1996 ல் அட்டை ஓவியமாக வந்தது. அந்த ஓவியம் இன்றளவும் எனக்குப் பிடித்த மிக நல்ல ஓவியம். அதற்குப் பின் அவர் படைப்புகள் பல சுகன் இதழ்களில் வந்திருக்கின்றன. அவரது ஓவியங்களும் தொடர்ந்து வந்திருக்கின்றன. அவை பாராட்டுகளையும் திட்டுகளையும் பரிசாகப் பெற்றிருக்கின்றன. சுகன் 200 விழாவிற்கு பல நாட்களுக்கு முன்பாகவே வந்துவிட்டார் ஷாராஜ். விழாவில் சுகன் இதழ் நிறுவனர் தியாகி கே.வி.திருஞானம் அவர்களின் படம் திறப்பதாக இருந்தது. அவரது படத்தை மிக அருமையாக ஓவியமாக வரைந்து எடுத்து வந்திருந்தார். என் எதிர்பார்ப்பை முற்றிலும் நிறைவு செய்கிற விதத்தில் வரையப்பட்ட பெரிய ஓவியம் அது. அதை இன்றும் அப்படியே வீட்டுக் கூடத்தில் மாட்டி வைத்திருக்கிறேன். கூடவே அருமையாய் பிரேம் செய்த, கலை உணர்வு ததும்பும் நாட்டியப் பெண் ஒருவரின் முக அபிநய வண்ண ஓவியம் ஒன்றை என் இரசனையைப் புரிந்துகொண்டு எனக்குப் பரிசாக எடுத்து வந்திருந்தார். அந்த ஓவியத்தைப் பார்த்து சில கணங்கள் அப்படியே கசிந்துபோனேன். எங்கள் வீட்டு வரவேற்பறையில் இன்றைக்கும் இருக்கிறது அந்த ஓவியம், தனது கலை நயத்தைக் கண்களுக்குள் குளுமையாய் அள்ளித் தெளித்தபடி. குறைவான வெளிச்சத்தில் பல நடுநிசிகளில் அந்த ஓவியத்தைப் பார்த்தபடி கிறங்கியிருக்கிறேன் நான். அதோடு விழாவில் சுகன் இதழ் வரலாற்றைக் கூறும் கண்காட்சி அமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்ட ஷாராஜ், இரவு பகலாக கடுமையாக உழைத்து கண்காட்சியை வடிவமைத்துக் கொடுத்தது என்னை நெகிழ வைத்தது. எந்தப் பலனையும் எதிர்பாராது ஓர் அசல் கலைஞன் தன் நேரத்தையும் உழைப்பையும் சிந்தியதை அருகிருந்து பார்த்தவன் நான். பல நாட்கள் கண்காட்சி உருவாக்கக் குப்பையில் அப்படியே படுத்துத் தூங்கியும் போயிருக்கிறார் ஷாராஜ். அந்த விழாவை முடித்து வைத்துப் பேசியபோது நான் சொன்னேன், 'இன்றைய தமிழ் படைப்புச் சூழலில் நம்பிக்கை தருகிற படைப்பாளிகளாக நான் இரண்டு பேரை முக்கியமாகப் பார்க்கிறேன். அந்த இரண்டு பேரின் படைப்பாற்றலையும் ஊதி ஊதி வளர்த்தெடுத்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தி, எத்தனையோ எதிர்பார்ப்புகள், விமர்சனங்களுக்கு இடையே, அவர்களின் ஆற்றலைப் புரிந்துகொண்டு, அவர்கள் சாதிக்கவேண்டும் என்கிற நோக்கில் சுகன் இதழில் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். நாளை அவர்களின் வெற்றி நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படும். இது நிச்சயம் நடக்கும்' என்றேன். நான் குறிப்பிட்ட அந்த இருவர் வா.மு.கோமு, ஷாராஜ். இன்றைக்கு அந்த இருவரின் வெற்றியும், தனித்துவமாய் நவீன தமிழ் இலக்கியத்தில் அழுத்தமாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஷாராஜ் தந்திருக்கும் பதில்கள் மிக முக்கியமானவை. முன் வைத்த கேள்விகளை அவருக்கே உரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும், எதையும் முடிந்த அளவுக்கு மிகச் சரியாக செய்ய வேண்டும் என்கிற துடிப்புடனும் எதிர்கொண்டு பதில் தந்திருக்கிறார். வாசியுங்கள். அவசியம் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். **

- சுகன்

** (இனி, நேர்காணல்) *** ##### 1. உங்கள் அடிப்படைப் படைப்புத்திறன் ஓவியமாக இருந்திருக்கிறது. நவீன ஓவியராக இன்று பரிணாமம் பெற்றிருக்கிற நீங்கள் ஓவியம் வரைதலின் சூட்சுமங்களை யாரிடம், எப்படி பயின்றீர்கள்? உயர் நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே எனக்கு ஓவியம் வரையும் திறன் இருந்தது. ஆனால், முறையான பயிற்சி எதுவும் பெறவில்லை. 17 - 18 வயது வாக்கிலேயே இலக்கியச் சிற்றிதழ்களில் கவிதை வாயிலாக இலக்கியப் பிரவேசம் ஆகிவிட்டது. இலக்கிய இதழ்களும், இலக்கிய உலகமும் எப்போதும் ஓவியம், இசை, நடனம், நாடகம், திரைப்படம் போன்ற சக நுண்கலைகள் குறித்து அக்கறை கொண்டிருக்குமாயிற்றே! அப்படித்தான் சிற்றிதழ்கள் வாயிலாகவும், இலக்கிய உலகில் உள்ள கலை விமர்சகர்களின் நூல்கள் வாயிலாகவும் நவீன ஓவியங்கள் மற்றும் அதன் வரலாறு குறித்த அறிமுகம் ஏற்பட்டது. இச் சமயத்தில் நானும் நவீன கோட்டோவியங்களை சிற்றிதழ்களில் வரையத் தொடங்கினேன். அதில் பெரும்பாலான ஓவியங்கள் வெளியானது சௌந்தர சுகன் இதழிலேயே! அதில் அட்டை ஓவியங்களாகவும் உள்ளோவியங்களாகவும் அவை இடம் பெற்றன. பிற்பாடு மற்ற சில சிற்றிதழ்களிலும் வரைந்துள்ளேன். அப்போது பொதுவான நுண்கலை ஓவியம் குறித்த மேம்பட்ட அறிதல்களோ, நவீன ஓவிய வரலாறு மற்றும் நவீன இஸங்களின் கோட்பாட்டியல் குறித்த முழுமையான அறிதல்களோ இல்லை. எனது 21 ஆம் வயதில்தான் பொள்ளாச்சியில் விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகள் (banner) எழுதும் தொழிற்துறை ஓவியம் கற்றுக்கொண்டேன். மறு ஆண்டிலிருந்து கோவையில் ஒரு பிரபல ஓவியக்கூடத்தில் பணிபுரியத் தொடங்கினேன். இத் தொழிலுக்கும் நுண்கலைக்கும் சம்மந்தமில்லை. மேலும் அங்கே எனது பணி ‘எழுத்துகளை வரைவது’ என்பதாகவே இருந்தது, ஆனால் அந்த காலகட்டத்தில்தான் நூலகத்தில் ஆய்வுகளுக்கான ரெஃபரன்ஸ் பகுதியில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருக்கும் ஆங்கில நூல்கள் வாயிலாக, நவீன ஓவியம் குறித்து கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து அறிந்துகொண்டேன். உறுப்பினர்களேயானாலும் ஆய்வுக்காக உள்ள அந்த நூலகள் வீட்டுக்கு எடுத்து வர தரப்பட மாட்டாது. எனவே ஞாயிற்றுக் கிழமைகளில் இதற்கென்றே கோவை சென்று, காலை முதல் மாலை வரை நூலகத்திலேயே இருந்து அவற்றை வாசிப்பேன். கிராமத்துப் பத்தாம் வகுப்பு படிப்பு மட்டுமே படித்த எனக்கு ஆங்கில வாசிப்பு பெரும் சவாலாக இருந்தது. பொருள் தெரியாத சொற்களை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்த பிறகு அகராதி மூலம் பொருள் அறிந்துகொள்வேன். தமிழில் இது போன்ற நூல்கள் இல்லாததால் வேறு வழியின்றி இவ்வாறான விடா முயற்சியுடனும் பல்வேறு சிரமங்களுடனுமே அந்த ஆங்கில நூல்களை வாசித்தறிந்தேன். இதன் இரட்டிப்புப் பலன்கள் என்னவெனில், ஓவியம் குறித்த சற்றே மேம்பட்ட அறிதலோடு ஆங்கிலம் வாசிக்கவும் பழகிவிட்டேன் என்பதுதான். பிறகு ஒவியம் கற்றுக் கொள்வதற்கான இந்திய ஆங்கில நூல்கள் பலவற்றையும் ஊடகம் வாரியாக வாங்கிப் பயின்றேன். பின்நாளில் எனது சாதாரண அலைபேசி வாயிலாகக் கூட இணைய தளங்களிலிருந்து கட்டுரைகளை வாசித்து பல தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டிருக்கிறேன். அத்தகைய அலைபேசிகளில் கட்டுரைகள் வாசிப்பது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கே தெரியுமல்லவா? ஆனால், வேறு வழியில்லை என்கிற நிலையிலும், எப்படியும் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற வேட்கையிலும்தான் அதைச் செய்தேன். அக்ரிலிக் ஊடகத்தை நான் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று எனது கித்தான் ஓவியங்களின் முதன்மை ஊடகமாக அதுவே உள்ளது. பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சிறியதொரு மடிக்கணிணியும், இணைய இணைப்பும் சாத்தியமாயிற்று. தேவைப்பட்ட மேற்கத்திய ஆங்கில நூல்கள், demo வீடியோக்கள், ஓவிய இமேஜ்கள் எனப் பலவற்றையும் தரவிறக்கம் செய்து பல்வகை தொழில் நுட்பங்களையும், நவீன ஓவிய வரலாறு மற்றும் கோட்பாடுகளையும் இன்னும் சற்று விரிவாக அறிந்துகொண்டேன். இவ்வாறு நுண்கலை ஓவியத்தை நான் சுயமாகவே கற்றுக்கொண்டேன். எனினும் இதெல்லாம் புற ரீதியிலானது. அக ரீதியில் நான் ஓவியம் கற்றுக்கொண்டது எனது மானசீக குருநாதர்களான பிக்காஸோ, எம்.எஃப்.ஹுஸேன், மாட்டிஸே ஆகியோரிடமிருந்தே! அவர்கள் இல்லாவிட்டால் நான் அவ்வளவு பாடுபட்டுக் கற்றுக்கொண்ட வரைதல் முறைகள், இலக்கணங்கள், தொழில் நுட்பங்கள் யாவும் வெறும் வடிவ ரீதியிலான பயன்பாட்டுக்கு மட்டுமே உரியதாக இருந்திருக்கும். அதே போல சிற்றிதழ் தொடர்பு எனக்கு இல்லாதிருந்தால் நான் நவீன ஓவியனாக ஆகியிருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ##### 2. சிற்றிதழ்களில் நவீன ஓவியங்களுக்கான இடம் பற்றிய உங்கள் பார்வை என்ன? தமிழில் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இலக்கியச் சிற்றிழ்கள், அல்லது வெகுமக்கள் இதழ்களின் இலக்கியப் பக்கங்கள் சார்ந்தே நவீன ஓவியங்கள் பயன்படுத்தப்படுவது பொது வழக்கமாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை நுண்கலை ஓவியத் துறைக்கு வெளியே நவீன ஓவியம் முதலில் பேசவும், பயன்படுத்தவும் பட்டது சிற்றிதழ்களில்தான். அதற்குப் பிறகே முன்னணி வெகுமக்கள் இதழ்கள் நவீன ஓவியர்களிடமிருந்து கதைகள் மற்றும் கவிதைகளுக்கான விளக்கச் சித்திரங்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கின. ஆனால். வெகுமக்கள் இதழ்களைப் பொறுத்தவரை இத்தகைய விளக்கச் சித்திரத் தேவைக்காக மட்டுமே நவீன ஓவியத்தையும், நவீன ஓவியர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன. மற்றபடி நவீன ஓவியம் என்னும் கலை குறித்து அது அக்கறை கொள்வதில்லை. நவீன ஓவியம் பற்றி மட்டுமல்ல; எந்த ஒரு நுண்கலை குறித்துமே வெகுமக்கள் இதழ்கள் தீவிர அக்கறை செலுத்தாது. துணுக்குச் செய்திகளாகவும், அவ்வப்போது ஒரு சிறு கட்டுரையாகவும் மட்டுமே அவை குறித்த செய்திகளை மட்டும் வெளியிடும். அவற்றின் வியாபாரத் தன்மை அத்தகையது. ஆனால், சிற்றிதழ்கள் அப்படியல்ல; அவை வியாபார நோக்கத்துடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சக கலைகளிலும், சமூகவியலிலும் சீரிய அக்கறை கொண்டவை. அதன்படி நவீன ஓவிய விளக்கச் சித்திரங்களைப் பயன்படுத்துவது தவிர, முன்னோடி நவீன ஓவிய மேதைகளுடையதும் சமகால நவீன ஓவியர்களுடையதுமான படைப்பு ஓவியங்களையும் பயன்படுத்துகின்றன. முக்கியமாக இலக்கிய நூல்களின் அட்டை ஓவியங்களாக பலவண்ணத்தில் இவை பயன்படுத்தப்படுவது வழக்கம். சிற்றிதழ்களில் விளக்கச் சித்திரங்களாகவோ, பக்க அலங்கரிப்புக்காகவோ அவை பயன்படுத்தப்படுவதும் நடைமுறை. அதே போல நவீன ஓவியர்கள், ஓவியங்கள் குறித்த கட்டுரைகள், தொடர்கள், நேர்காணல்கள் ஆகியன இடம் பெறுவதும் பதிவு. எனினும் நவீன ஓவியம் கதை, கவிதைகள் போன்றதேயான படைப்பு முக்கியத்துவம் பெறுவது என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. அது செய்யப்படவேண்டும், இதழ் ஆசிரியர்களும் ஓவியர்களும் அதில் கவனம் கொள்ளவேண்டும் என்பதே எனது முக்கிய பார்வை. இது குறித்து சில வருடங்களுக்கு முன்பு சுகன் இதழில் ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன். வெகு சில குற்றிதழ்கள் மட்டுமே ஓவியத்துக்கு இத்தகைய முக்கியத்துவத்தைத் தந்து, அதற்கென ப்ரத்யேகமாக வரையப்பட்ட ஓவியங்களை ஓவியர்களிடமிருந்து வாங்கி அட்டையிலேயே வெளியிடுகின்றன. அதில் முதலாவதாகவும், முக்கியமாகவும் சொல்லப்பட வேண்டியது சௌந்தர சுகன். ஏனெனில், அவ்விதழ் இரு பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது மட்டுமின்றி இச் செயலில் கூடுதல் அக்கறை கொண்டிருப்பதும் கூட. அதில் பங்கேற்கும் ஓவியர்கள் சிலரேனும் வெறும் அலங்கார நோக்கமின்றி ஓவியத்தைத் தீவிர படைப்புத் தன்மையோடும், சமூகக் கருத்தாக்கங்களோடும் படைத்தளிக்கிறவர்களாக உள்ளனர். மூத்த ஓவியர் திரு.ஏ.நாகராஜன். பெண் கவிஞரும் ஓவியருமான சக்தி அருளானந்தம், மற்றும் நான் இத்தகைய ஓவியங்களை அவ்விதழில் படைத்துள்ளோம். இவ்விதழைப் பொறுத்தவரை அதில் இடம்பெறும் ஓவியங்களை வாசகர்கள் நுட்பமாக கவனித்து விமர்சிக்கவும் செய்வார்கள் என்பது தனிச் சிறப்பு. சில சமயம் எனதும், சமீபத்தில் ஏ.நாகராஜனுடையதுமான அட்டை ஓவியங்கள் சர்ச்சைக்குரியதாகவும் ஆகியிருக்கின்றன. இறக்கை, மணல் வீடு, சிறகு போன்ற குற்றிதழ்களும் இதே போல அட்டை ஓவியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவை / கொடுப்பவை. ஆனால், சுகன் இதழில் போல வேறு எந்த இதழிலும் ஓவியம் படைப்பு முக்கியத்துவம் பெற்றதோ, வாசகர் விமர்சனம் மற்றும் ரசனைக்கு உள்ளானதோ இல்லை. மற்ற சிற்றிதழ்கள் மற்றும் குற்றிதழ்கள் இதில் கவனம் கொள்ள வேண்டும், ஓவியர்களும் முன்வந்து பங்குபெறவேண்டும் என்பதே எனது ஆவல். ##### 3. ஓவிய மனம் கொண்ட உங்கள் நாட்டம் எப்படி கவிதை, சிறுகதைகளுக்குள் பாயத் தொடங்கியது? எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே கவிதை – அதாவது அப்போது கவிதை என நம்பிய ஒன்றை – எழுதும் பழக்கம் இருந்தது. பிற்பாடு பொள்ளாச்சியில் எழுத்தாள நண்பர்களான சரசுராம், மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டு அவர்கள் மூலம் இலக்கியம் அறிமுகமானது; நானும் இலக்கியத்துக்கு அறிமுகமானேன். அவர்கள்தான் எனக்கு கல்யாண்ஜி, ராஜ சுந்தரராஜன் போன்றோரின் தொகுப்புகளை வாசிக்கக் கொடுத்து கவிதை என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொடுத்தவர்கள். ஏற்கனவே இருந்த பழக்கம் என்பதால் அதைக் கற்றுக்கொள்வது சுலபமாயிற்று. பின்னர் சரசுராமின் தூண்டுதலால் சிறுகதைகளும் எழுதத் தொடங்கினேன். சிற்றிதழ்கள், வெகுமக்கள் இதழ்கள் இரு தரப்பிலும் நான் எழுதிய கதைகளே கவனத்துக்குள்ளானதால் பிறகு அதையே முதன்மை ஊடகமாகக் கொண்டுவிட்டேன். கவிதை இரண்டாவதாக இருந்தது. ##### 4. எதிர்கவிதை என்று எப்படிப்பட்ட கவிதைகளை நீஙகள் அடையாளப்படுத்துகிறீர்கள்?

Image Courtesy : pinterest.com

எதிர் கலை, எதிர் இலக்கியம் ஆகியவை 1950களில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட எதிர்ப்பியக்கக் கலைச் செயல்பாடுகளாகும். நிலைநிறுத்தப்பட்டுள்ள கலை – இலக்கியங்களுக்கு எதிரான மாற்று நடவடிக்கையே இவ்வியக்கத்தின் இயங்கியல். இதன் முன்னோடி இயக்கம் டாடாயிஸம். அது முதலாம் உலகப் போரின்போது 1915 வாக்கில் சுவிட்ஸர்லாந்தில் உருவானது. உலகப் போரினால் விளைந்த நாசங்களையும், கொடுமைகளையும், துயரங்களையும் கண்டு மனம் நொந்த கலை – இலக்கியவாதிகளிடையே, ‘இப்படிப்பட்ட சூழலில் கலை இலக்கியங்களுக்கு என்ன அர்த்தம்? மனிதமற்ற இந்த சமூகத்துக்கு கலை – இலக்கியங்கள் தேவையா?’ என்கிற கேள்விகள் எழுந்தன. கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், மரபு, அழகியல் போன்ற விழுமியங்களையும் அவர்கள் புறக்கணித்தனர். அவற்றைச் சிதைப்பதையே தங்கள் நோக்கமாகவும் கொண்டனர். அதன் விளைவாக, அது வரையில் இருந்த சகல கலைக் கோட்பாடுகளுக்கும், நடைமுறைகளுக்கும், மரபார்ந்த அழகியலுக்கும் எதிரான முறைகளில் அவர்களின் படைப்புகள் படைக்கப்பட்டன. அவை கலகத்தன்மை வாய்ந்தவையாகவும், நுகர்வோரை அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருந்தன. அதுவே எதிர் கலை – எதிர் இலக்கியம் எனப் பெயர் பெற்றது. டாடாயிஸ இயக்கம் 1922 வாக்கில் முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் அதன் எதிர் கலைக் கோட்பாடு அழிந்துவிடவில்லை. 1950களில் அது புத்துருவாக்கம் பெற்றது. அதுவே எதிர் கவிதை இயக்கமாகி இன்றளவும் உலகளாவிய அளவில் செயல்பட்டு வருகிறது. அதற்கென பல இதழ்களும், இணையதளங்களும் உள்ளன. நிக்கனோர் பர்ரா (Nicanor Parra) எதிர் கவிதை இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவரும் எலியாஸ் பெட்ரோ பௌலோஸும் (Elias Petropoulos) இவ்வியக்கத்தின் தோற்றுவிப்பாளர்கள். இவர்களின் கோட்பாடுகளிலிருந்து அடுத்த கட்டத்துக்கு சமகால எதிர் கவிஞர்கள் வந்துவிட்டார்கள். முன்பே கூறியபடி, நிலைநிறுத்தப்பட்டுள்ள கவிதைக் கூறுகளான மென்மை, கற்பனாவாதம், இனிமை, மரபார்ந்த அழகியல் போன்றவற்றை எதிர் கவிதை புறக்கணிக்கிறது. அதற்கு மாறாக அன்றாட வாழ்வில் நம்மைச் சூழ்ந்துள்ள வன்மை, எதார்த்தம், கடுமை, குரூரம் ஆகியவற்றையே மாற்று கவிதைக் கூறுகளாக முன்வைக்கிறது. மாறா வகைமாதிரி(stereotype)களையும் ஒதுக்கி புதிய வடிவங்கள், சொல்லல் முறைகள், உத்திகள், பரிசோதனைகள் ஆகியவற்றையும் கைக்கொள்கிறது. சமூக விமர்சனம், நையாண்டி, அங்கதம், வஞ்சப் புகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் அவற்றில் பயன்படுத்தப்படும். கவிதைக்கும் உரைநடைக்கும் இடையேயான வசன கவிதை முறையும் பின்பற்றப்படும். இவை எதிர் கவிதையின் புறத் தன்மைகள். அதன் அகத் தன்மைகளை சுருக்கமாக இப்படிக் வரையறுக்கலாம்: பொதுவாக கவிதை என்பது உணர்ச்சி அடிப்படையிலானது. ஆனால் எதிர் கவிதை அறிவு அடிப்படை கொண்டது. உணர்ச்சிக்கு அதில் இடமிருந்தாலும், அறிவுத் தூண்டலே அதன் முதன்மை நோக்கமாக இருக்கும். வாசகர் காணாத மெய்ப் பொருள்களைக் காண்பிப்பதும், அவர்களைத் தெளிவுபடுத்தல்களுக்கு உள்ளாக்குவதுமே எதிர் கவிதையின் / கவிஞர்களின் லட்சியம். சுருங்கக் கூறுவதெனில் மென்மை, இனிமை, அழகு, கற்பனாவாதம், கிளர்ச்சியூட்டல் ஆகியவற்றால் வாசகரை வாசிப்பு இன்பத்தில் திளைக்கச் செய்வதற்கு மாறாக, வன்மை, தீவிரம், சிதைப்பு, எதார்த்தம், அதிர்ச்சியூட்டல் ஆகியவற்றால் உண்மைகளைப் புரிந்துகொள்ள வழி செய்வதே எதிர்கவிதை!