நட்சத்ரங்கள் தீ பூக்கும் ஆலாபனையில் எரியும் பனிப் பாடல்கள்

நேற்றைய இரவு தளும்பும் என் தலைக்குள் இன்றைய சாயுங்காலத்தையும் ஊற்றி நிறைத்துவிட்டேன் செவ்வந்திக் குளிர் கருக நட்சத்ரங்கள் தீ பூக்கும் ஆலாபனையில் எரியும் பனிப் பாடல்கள் விஷக் கோப்பையில் நடனிக்கின்றன ஜோடிகளும் குழுக்களுமான பெருங்கூட்டத்தில் நான் கைவிடப்பட்ட தனியன் குளிர் உதிரன் தீ வினையன் நடுங்கும் கரங்களால் மூன்றாவது சுற்றைப் பூர்த்தியாக்கி இலைப் புகையில் வெதுமையூட்டிக்கொள்கிறேன் மழைக் காடுகள் எரிய பூஞ்சாரலுக்கு யாரோ தீ மூட்டிவிட்டார்கள் புகைகிறது பனிமூட்டம் மலை நிலா தள்ளாடி என் கோப்பைக்குள் வீழ்கிறது அதன் முலை குடிக்க நீந்தி வருகின்றன கவிதை வரிகள் கருநாகமாகி மிதக்கும் நிலவோடு நெளிந்து வரும் கருநாகத்தையும் பருக முற்பட்டபோது எனது மேலுதட்டைக் கடித்தது நிலவா, கருநாகமா? II பாம்பு விஷம் போதையாகும் ராத்திரியில் கனவுகளும் உறங்க மறுக்கப்படுகின்றன (இமைகளற்ற பாம்புகள் எப்படி உறங்கும், என்ன கனவு காணும்) கருநாகம் தீண்டிய மலை நிலவு சமவெளி இறங்காத வரை நீலம் பாரிக்கப்போவதில்லை நுரை கக்கிச் சாகப்போவதுமில்லை, சந்த்ரிகா மின்காந்த வயல்களில் கருக்கரிவாளோடு இருளும் உன் பிம்பம் நட்சத்ரங்களை அறுவடை செய்யட்டும்