பிள்ளைக் கலி

மரணம் தின்று உயிர் வளர்க்கும் பேய்க் காளீ தாய்த் தெய்வமே பிணங்கள் செரிக்கும் நின் வயிற்றில் சூலுற்று நீ குடித்த ரதமெல்லாஞ் சிந்த நின் யோனி பிளந்து பிறந்தேன் பித்து நெஞ்சம் விம்மிப் புடைத்த முலை சுரந்து எனதழுகை அடைத்தாய் பசி அவித்தாய் தாயின் பித்துண்டு வளர்ந்த பிள்ளை பெரும் பித்தனாகி அலைகிறேனடி பாவி சண்டாளி இனியேனும் என் சித்தந் தெளிவி இல்லாவிடில் கலங்கிய மூளை சிதற நின் காலடியில் தலையுடைத்துச் சாவேன் பின்பு உனைவிடப் பெருந் தெய்வப் பேயாகி குரல்வளை கடித்துன் ரத்தம் குடித்து எனைப் பித்தாக்கிய கொடுமைக்கு வஞ்சம் தீர்ப்பேன்