ஷாராஜ் பற்றி

ஓவியர் பற்றிய ஓர் அறிமுகம்

இந்திய சமகால நவீன தாந்த்ரீக ஓவியர்களில் புது வரவான ஷாராஜ், தாந்த்ரீகம் (tantra) மற்றும் அதன் ஒரு பிரிவான கருப்பு மாந்த்ரீகத்திற்குப் பிரசித்தி பெற்ற கேரள மாநிலத்தவர். அம் மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், தமிழக எல்லையோரமாக உள்ள தனது சொந்த ஊரான குக்கிராமத்திலேயே இப்போதும் வசித்துவருகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றபோதும் தமிழகத்தில், தமிழ் வழிக் கல்வியையே - பள்ளி இறுதி வரை மட்டிலுமே - பயின்ற இவர், ஓவியத்தை சுயமாகக் கற்றுக்கொண்டவர். ஐரோப்பிய நவீனத்துவத்தையும், இந்திய ஓவிய - சிற்ப மரபுகளையும் ஆழ்ந்து உள்வாங்கியுள்ளவர். தாந்த்ரீகம், யோகம், ஆன்மீகம், இறையியல், மெய்யியல் (mysticism), மீயறி ஆய்வியல் (metaphysics), அறிவியல், உளவியல், மானுடவியல் (anthropology), உலக மத வரலாறு, மாந்த்ரீகம், அமானுஷ்ய ஆற்றல் பயில்வு (occult practice) உள்ளிட்ட பல்துறை ஆய்விலும் ஈடுபட்டுவருபவர். அவற்றில் கிடைக்கப்பெற்ற மெய்ஞான அறிதல்களும், யோகப் பயிற்சிகளில் பெற்ற மெய்யியல் (mystic) அனுபவங்களும் கலந்து படைக்கப்படுபவையே அவரது ஓவியங்கள்.

பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியான இவர், அடிப்படையில் ஓர் இலக்கியவாதி. நையாண்டிச் சிறுகதையாளர் மற்றும் கலகக்கார எதிர் கவிஞர். சமூக உணர்வு மிக்க தனது சிறுகதைகளுக்காக பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள இவரது எதிர் கவிதைகள், இலக்கியச் சிற்றிதழ்களில் அட்டை ஓவியமாக இடம் பெற்ற கோட்டோவியங்கள், கட்டுரைகள் மற்றும் எதிர்வினைகளில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஆகியவை அந்தந்த இலக்கிய இதழ் வட்டாரங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரியவையாக ஆனதுண்டு.

முழு நேர இலக்கியவாதியாக இயங்கிக்கொண்டிருந்த அவர் தாந்த்ரீகத்தில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக கடந்த பல வருடங்களாக அது குறித்த தேடல்களிலும் ஓவியப் படைப்பாக்கங்களிலும் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார். பாரம்பரியமாக பூஜைத் தொழிலில் உள்ள குடும்பத்தில் பிறந்த அவர் பதின்மூன்று வயதிலேயே கடவுள் நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டவர். எனினும் ஆன்மீகத்தில் நாட்டம் மிக்கவர். ‘கடவுள் இல்லை; ஆனால், கடவுள் தன்மை என்பது உண்டு’ என்ற ஓஷோவின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் அவரது தாந்த்ரீக தேடல், இந்து மதத்தின் பேருண்மைகள் பற்றிய புதிய கண்டறிதல்களை சாத்தியமாக்கியிருக்கிறது. தாந்த்ரீகமே இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி என்பது அவரது ஆய்வு முடிபு. மேலும் அவரது சமீப கால ஆய்வுகள் உலக மதங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது தாந்த்ரீகமே என்பதை நிறுவுகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் விதமாக அவரால் வரையப்பட்டவையே அவரது நவீன தாந்த்ரீக ஓவியங்கள்.

என்னுடைய ஓவியங்கள் வெறுமனே சுவர்களை அலங்கரிப்பதற்காகப் படைக்கப்படுபவையல்ல. அவற்றின் நோக்குநர்களில் ஒரு தாக்கத்தை, மாற்றத்தை, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் படைக்கப்படுபவை.

ஷாராஜ்